மோடி கேர் - யாருக்கு லாபம்?

அமெரிக்காவில் அன்றைய அதிபர் ஒபாமா அறிமுகப்படுத்திய ஒபாமா கேர் என்று பரவலாக அறியப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போல இப்போது இந்தியாவில்

அமெரிக்காவில் அன்றைய அதிபர் ஒபாமா அறிமுகப்படுத்திய ஒபாமா கேர் என்று பரவலாக அறியப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போல இப்போது இந்தியாவில் பிரதமர் 
நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் என்கிற மோடி கேர் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையில் அவரால் அறிவிக்கப்பட்ட இந்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அது நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் செலவுகளை 60% மத்திய அரசும், 40% மாநில அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் இது செயல்படுத்தப்படுகிறது.பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா - ஆயுஷ்மான் பாரத் என்கிற இந்தத் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 25 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் கைகோக்கின்றன. 
ஏறத்தாழ 10 கோடி குடும்பத்தைச் சேர்ந்த 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் குறிக்கோள். இதற்காக நாடெங்கிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லாமல் 9,000க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பல தனியார் மருத்துவமனைகள் விரைவில் இணைக்கப்பட இருக்கின்றன. இதய நோய்கள், சிறுநீரக மற்றும் கல்லீரல் குறைபாடுகள், மூட்டு மாற்று சிகிச்சை உள்ளிட்ட ஏறத்தாழ 1,350 வகையான உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தத் திட்டத்தில் வழிகோலப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 2,500 அதிநவீன மருத்துவமனைகளை அமைக்கும் முயற்சியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நான்கு கோடிக்கும் அதிகமானோர் மருத்துவச் செலவுகளால் வறுமையை எதிர்கொள்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாகவே மத்திய-மாநில அரசுகள் 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் மருத்துவ சேவையை ஈடுகட்ட முயற்சிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோடி அரசு இப்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. 
மக்களின் மருத்துவத் தேவையை எதிர்கொள்ள உலகில் இரண்டு முன்மாதிரிகள் உள்ளன. இங்கிலாந்தில் அரசின் நேரடிக் கண்காணிப்பிலுள்ள பொது மருத்துவமனைகளின் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுகிறது. ஜெர்மனியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளின் மூலம் மக்களின் மருத்துவத் தேவைக்கு அரசு உதவுகிறது. நரேந்திர மோடி அரசு மேலே குறிப்பிட்ட இரண்டு முன்மாதிரிகளையும் ஒருங்கிணைத்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. 
நரேந்திர மோடி அரசு அறிவித்திருக்கும் ஆயுஷ்மான் பார்த் என்கிற தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியாவில் இப்போதிருக்கும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் போதுமானதா என்கிற ஐயப்பாடு எழுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும், மருத்துவமனைகளும் தங்களுக்கு லாபம் ஈட்டுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் போனால் என்ன செய்வது என்கிற அச்சமும் ஏற்படாமல் இல்லை.
இதுபோன்ற திட்டங்கள் மக்களின் வரிப் பணத்தில் செயல்படுத்தப்படுபவை. ஒருமுறை தொடங்கிவிட்டால், சரிவர இயங்காவிட்டாலும், மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டாலும் அதை நிறுத்த முடியாமல் அரசு அதனால் ஏற்படும் நிதிச்சுமையைச் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கெனவே இருக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்களுக்குக் காப்பீடு வழங்குகின்றன. ஆனால், அவர்களது காப்பீட்டின் அளவு, மருத்துவமனைக்குத் தரும் கட்டணம் உள்ளிட்டவை மாறுபடுகின்றன, அவ்வளவே. 
இந்தத் திட்டங்கள் எல்லாமே குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்குவதைக் கட்டாயப்படுத்துவதால், சிகிச்சையின் தரத்திற்கு உத்தரவாதம் இல்லை. அரசு வழங்கும் காப்பீட்டுத் தொகைக்கு சிகிச்சை அளிப்பது இயலாது என்று ஏற்கெனவே இந்திய மருத்துவர்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. தேவையில்லாமல் இடைத்தரகர்களும், மருத்துவமனைகளும் சம்பாதிப்பதற்கு இந்தத் திட்டம் வழிகோலுமே அல்லாமல், நோயாளிகளுக்குப் பயன்படாது என்கிற பரவலான கருத்தை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. 
இந்தியாவில் 1,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவர்தான் காணப்படுகிறார். 90,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனைதான் இருக்கிறது. இன்னும் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் தேவையை விட 22% குறைவாகக் காணப்படுவதாக மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது. தனியார் மருத்துவமனைகளும் கிராமப் பகுதிகளில் போதுமான மருத்துவ வசதிகளுடன் இல்லாமல் இருக்கும் சூழலில் இவ்வளவு பெரிய திட்டத்தை அரசு எப்படி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்போகிறது என்பது புரியவில்லை.
நல்லெண்ணத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டம்தான் என்றாலும், அதை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதையும் அதில் தவறுகள் நேர்ந்துவிடாமல் கண்காணிப்பதையும் உறுதிப்
படுத்தாமல் போனால், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் நலன்தான் பேணப்படுமே ஒழிய, மக்கள் பயனடைய மாட்டார்கள் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com