மூச்சுத் திணறுகிறது!

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு பெண் உட்பட 10 துப்புரவுத் தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டிகளையும், கழிவுநீர் வடிகால்களையும் துப்புரவு செய்யும்போது

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு பெண் உட்பட 10 துப்புரவுத் தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டிகளையும், கழிவுநீர் வடிகால்களையும் துப்புரவு செய்யும்போது விஷவாயு தாக்கி இறந்திருக்கிறார்கள். எந்தவிதப் பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியதால்தான் அவர்கள் மரணமடைய நேரிட்டது. 
2011-இல் எடுக்கப்பட்ட சமூகப் பொருளாதார ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தங்களது வாழ்வாதாரத்துக்காக இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் கழிவுநீர் துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. இவர்கள் எந்தவித தொழில்நுட்பப் பயன்பாடும் இல்லாமல் நேரிடையாக துப்புரவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 
1993-லேயே மனிதர்கள் நேரிடையாக மனிதக் கழிவுகளைத் துப்புரவு செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தடையை மேலும் உறுதிப்படுத்தவும், மனிதக் கழிவுநீர் துப்புரவுத் தொழிலாளிகளின் மறுவாழ்வை உறுதிப்படுத்தவும் மனிதத் துப்புரவுத் தொழிலாளிகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கெல்லாம் பிறகும்கூட தொழில்நுட்பம் இல்லாமல் நேரிடையாகத் துப்புரவுத் தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டிகளிலும் கழிவுநீர் ஓடைகளிலும் இறங்கி வேலை செய்யும் அவலம் தொடர்கிறது என்பது மன்னிக்க முடியாத குற்றம்.
கடந்த வாரம் புது தில்லியில் ஐந்து இளைஞர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்கி துப்புரவு செய்துகொண்டிருந்தபோது இறந்திருக்கிறார்கள். அதேபோல, ஒடிஸா மாநிலத்திலும் ஐந்து துப்புரவுத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது விஷவாயு தாக்கி இறந்திருப்பது தெரியவந்திருக்கிறது. 
கழிவுநீர் தொட்டிகளிலோ, ஓடைகளிலோ துப்புரவுத் தொழிலாளர்கள் நேரிடையாக இறங்கி பணி செய்வதை மனித துப்புரவுத் தொழிலாளர்கள் சட்டம் தடை செய்கிறது. அப்படியிருந்தும்கூட இந்த வழக்கம் இந்தியா முழுவதுமே கடைப்பிடிக்கப்படுகிறது.
துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மறுவாழ்வுச் சட்டம் - 2013, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் முனைப்புடன் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இந்த சட்டத்தின் 7-ஆவது பிரிவின்படி, துப்புரவுத் தொழிலாளி ஒருவரைப் பாதுகாப்புக் கவசம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் இல்லாமல் அந்தப் பணியில் ஈடுபடப் பணித்தல் சட்டப்படி குற்றம். அதுபோன்ற சட்ட மீறலுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இவை இரண்டுமோ விதிக்கப்படலாம். அப்படியிருந்தும் அது குறித்த எந்தவித அச்சமும் இல்லாமல் துப்புரவுத் தொழிலாளர்களை கழிவுநீர் தொட்டிகளிலும், கழிவுநீர் வடிகாலிலும் துப்புரவு செய்ய பணிக்கப்படுகிறார்கள் என்றால், சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றுதான் பொருள்.
துப்புரவுத் தொழிலாளர் சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்கும்படி மத்திய அரசு மாநில அரசுகளை வற்புறுத்துவதாகக் கூறுவது சம்பிரதாய வார்த்தைகளாகத்தான் தெரிகிறது. இல்லையென்றால், கழிவுநீரில் இறங்கிப் பணியாற்றும்போது மரணமடையும் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதுபோன்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரிக்காது.
கழிவுநீர் துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்த சட்டம் முறையாக செயல்பட வேண்டுமானால், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவது உறுதிபடுத்தப்பட்டு அது குறித்தச் செய்தி பொதுவெளியில் பரவலாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். 
அதேபோல, கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான உபகரணங்களும் இயந்திரங்களும் மாநில அரசுகளால் தரப்பட்டு அவற்றின் மூலமாக மட்டுமே கழிவுநீர் தொட்டிகளும், ஓடைகளும் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். மத்திய குடிநீர் மற்றும் வாழ்நல துப்புரவுத் துறையின் 2016-ஆம் ஆண்டுக்கான கையேட்டின்படி, கிராமப்புறங்களில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள் இல்லை என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, இன்னும்கூட கிராமப்புறங்களில் மனிதக் கழிவுகளை மனிதர்கள்தான் அகற்றுகிறார்கள் என்பது மறைமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 
நகர்மயமாதல் அதிகரிக்க அதிகரிக்க அதன் விளைவாக வாழ்நல துப்புரவுப் (சானிடேஷன்) பணியின் தேவையும் அதிகரிக்கிறது. கழிவுநீர்த் தொட்டிகளை நேரிடையாகத் துப்புரவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் அதிக எண்ணிக்கையில் துப்புரவுத் தொழிலாளர்கள் மரணமடையும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திலேயே இதுபோன்ற 144 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன எனும்போது அகில இந்திய அளவில் நிலைமை என்ன என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். 
நம்மால் செவ்வாய் கிரகத்துக்கும் சந்திரனுக்கும் விண்வெளிக்கலங்களை செலுத்தும் அளவுக்குத் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைய முடிந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய சாதனைதான். ஆனால், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு விஷவாயு தாக்காமல் இருப்பதற்கான அடிப்படைப் பாதுகாப்புக் கவசங்களைக்கூட வழங்க முடியாத நிலைமை காணப்படுவது எத்தகைய நகைமுரண்? 
எந்தவித பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் தொடரும் வரை, தூய்மை இந்தியா திட்டமும், கழிப்பறைகள் கட்டும் திட்டமும் நடைமுறைப்படுவதில் மகிழ்ச்சிய டைய என்ன இருக்கிறது? இந்தியா எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னை துப்புரவுத் தொழிலாளர்களின் மரணம்தான். இது தொடரும் வரை மானுட சமுதாயத்தின் முன்னால் நமக்குத் தலைகுனிவுதான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com