இணைப்பதால் ஆயிற்றா?

வாராக்கடன் பிரச்னையாலும் பல்வேறு மோசடிகளாலும் தள்ளாடும் வங்கிகளைக் காப்பாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக,

வாராக்கடன் பிரச்னையாலும் பல்வேறு மோசடிகளாலும் தள்ளாடும் வங்கிகளைக் காப்பாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, இழப்பால் தள்ளாடும் வங்கிகளை நன்றாகச் செயல்படும் வங்கிகளுடன் இணைக்க மத்திய அரசு முற்பட்டிருக்கிறது. அதன் மூலம் வாராக்கடன் பிரச்னையை எதிர்கொள்வது என்கிற உத்தியைக் கையாள முற்பட்டிருக்கிறது. பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளையும் இணைக்கப் போவதாக, கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த வங்கிகள் இணையும்போது அது இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியாக செயல்படும் என்றும் கூறியிருக்கிறது.
பொதுத்துறை வங்கிகளில் நிர்வாக சீர்திருத்தத்தை மேற்கொண்டு, அவை லாபகரமாக நடப்பதை உறுதிப்படுத்திய பிறகு வங்கிகளை இணைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருந்தால் அதை வரவேற்கலாம். ஆனால், வங்கிச் சீர்திருத்தம் குறித்தோ, வங்கி நிர்வாகத்தை முறைப்படுத்துவது குறித்தோ எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல், பெருகிவிட்டிருக்கும் இழப்புகளை சரி செய்வதற்குப் பதிலாக, இழப்பில் இயங்கும் வங்கிகளை லாபகரமாக இயங்கும் வங்கிகளுடன் இணைத்து தற்காலிக விடை தேடும் முயற்சியில் அரசு இறங்கியிருக்கிறது.
பாங்க் ஆஃப் பரோடா லாபம் ஈட்டும் பொதுத்துறை வங்கியாக இருந்து வருகிறது. தேனா வங்கியோ மிக மோசமான நிதி நிலைமையில் இந்திய ரிசர்வ் வங்கியால் இனிமேல் எந்தவொரு கடனையும் வழங்கக் கூடாது என்று தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இயங்கி வருகிறது. பாங்க் ஆஃப் பரோடாவுடன் தேனா வங்கியை இணைப்பதன் மூலம் அந்தப் பிரச்னையை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது மிகவும் தவறான அணுகுமுறை என்பதை பாங்க் ஆஃப் பரோடாவின் பங்குகள் சரிந்திருப்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியுடன் பல்வேறு இணை வங்கிகள் இணைக்கப்பட்டன. அதேபோல, பிரச்னையில் மூழ்கி திவாலாகும் நிலையில் இருந்த ஐடிபிஐ வங்கியை சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) அதன் பங்குகளை வாங்கி நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதுபோன்று வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்படும் வங்கி இணைப்புகள் வியாபார நோக்கில் மிகவும் மோசமான முடிவு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
இழப்பில் இயங்கும் வங்கிகள், நன்றாகச் செயல்படும் வங்கிகளுக்கு சுமையாக மாறி, அவற்றையும் புதை குழிக்குள் இழுத்துச் செல்லும் அவலம்தான் இதனால் ஏற்படும். அப்படி இணைப்பதன் மூலம் இழப்பில் இயங்கும் வங்கிகளின் வாராக்கடன் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுவிடப் போவதில்லை. 
கடந்த ஏப்ரல் 2017 முதல் இதுவரை வங்கிகளின் செயல்பாடுகளை முடுக்கிவிட மத்திய அரசு சுமார் ரூ.99,476 கோடியை ஒதுக்கியிருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மத்திய அரசு பாங்க் ஆஃப் பரோடாவின் முதலீட்டை வலுப்படுத்த ரூ.5,300 கோடியை வழங்கியிருக்கிறது. இதிலிருந்து வலுவான நிதி நிலையில் பாங்க் ஆஃப் பரோடா இல்லை என்பது புரிகிறது. இந்த நிலையில் இழப்பில் செயல்படும் தேனா வங்கியையும், பெரிதாக லாபம் ஈட்டாத விஜயா வங்கியையும் பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைப்பதன் மூலம் அரசு என்ன சாதித்துவிடப் போகிறது என்று தெரியவில்லை.
இந்திய வங்கிகள் இதுபோன்ற இணைப்புகளின் மூலம் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் செயல்பாட்டைப் பொருத்தவரை சிறிதாகி வருகின்றன. தற்போதைய பாங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றின் இணைப்புக்குப் பிறகு பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 19-ஆகக் குறைந்திருக்கிறது. வங்கித் துறையிலிருந்து அரசு வெளியேற வேண்டும் என்கிற கருத்துக்கு இது வலு சேர்த்துவிடாது என்பது ஒருபுறம் இருக்க, பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டை மேலும் விமர்சனத்துக்கு உரித்தாக்கி, கடைசியில் அதிகக் கிளைகளும், கூடுதல் முதலீடுமுள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார் மயம் என்கிற பெயரில் பன்னாட்டு வங்கிகளுக்கு தாரைவார்க்கும் முயற்சியின் ஒரு கட்டமாகக்கூட இந்த இணைப்புகள் இருக்கக்கூடும். 
இந்தியாவில் அதிகமான அளவில் அரசுத்துறை வங்கிகள் இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. 1969-இல் அன்றைய இந்திரா காந்தி அரசு ஒன்பது தனியார் வங்கிகளை அரசுடைமையாக்கியதற்கு சில முக்கியக் காரணங்கள் இருந்தன. தனியார் வங்கிகள் நகர்ப்புறங்களில் மட்டுமே இயங்கி வந்ததும், பெரு முதலாளிகளுக்கு மட்டுமே உதவியாக இருந்ததும், கிராமப்புறங்களில் கிளைகளை ஏற்படுத்தி விவசாயிகளுக்கும், குடிசைத் தொழில், சிறு - குறு தொழில்கள் உள்ளிட்டவற்றுக்கு கடனுதவி வழங்காமல் இருந்ததும் முக்கியமான காரணங்கள். அதனால் அன்று வங்கிகளை தேசிய மயமாக்குவது அவசியமாக இருந்தது.
இப்போது குக்கிராமங்கள் வரை பொதுத்துறை வங்கிகள் செயல்படுகின்றன என்பது மட்டுமல்லாமல், நரேந்திர மோடி அரசின் ஜன் தன் திட்டத்தின் மூலம் அடித்தட்டு மக்கள்வரை வங்கி வாடிக்கையாளராக மாறியிருக்கிறார்கள். அதே நேரத்தில், இப்போதும்கூட கல்விக் கடனாக இருந்தாலும், விவசாயக் கடனாக இருந்தாலும், சிறு - குறு தொழில்களுக்கான கடன்களாக இருந்தாலும் அவை பொதுத்துறை வங்கிகளின் மூலம் மட்டுமே வழங்கப்படுகின்றன. தனியார் வங்கிகள் கிராமங்களில் செயல்படவோ, சாமானியர்களுக்கு சேவை செய்யவோ தயார் இல்லாத நிலைதான் இப்போதும் தொடர்கிறது. அதனால் தனியார்துறை வங்கிகள் பொதுத்துறை வங்கிகளின் சேவையை ஈடுகட்டாது.
பொதுத்துறை வங்கிகள் திறம்பட செயல்படுவதை உறுதிப்படுத்துவதை விட்டுவிட்டு, வங்கிகள் இணைப்பின் மூலம் அரசு கண்துடைப்பு நாடகம் நடத்துகிறதா அல்லது தற்காலிகத் தீர்வு காண முற்படுகிறதா என்று தெரியவில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com