பக்தி பகல் வேஷமாகிறது!

விநாயகர் அல்லது கணேசர் என்று அறியப்படும் பிள்ளையாரின் முக்கியத்துவம் வேதகாலத்திலிருந்து

விநாயகர் அல்லது கணேசர் என்று அறியப்படும் பிள்ளையாரின் முக்கியத்துவம் வேதகாலத்திலிருந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. விக்னேஸ்வரன் என்பதற்கு தடைகளை (விக்னம்) அகற்றுபவர் என்று பொருள். எந்தவொரு நிகழ்வைத் தொடங்கும்போதும் பிள்ளையாரை வழிபட்டு தொடங்குவதும், பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குவதும் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்படும் பாரதப் பண்பாட்டு வழிமுறை. அதனால், விநாயக சதுர்த்தி விமர்சையாகக் கொண்டாடப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தடைகளை அகற்றும் கடவுளான விநாயகர், வெறும் இந்துக் கடவுளாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அதனால்தான் கடல் கடந்தும் விநாயகர் வழிபாடு என்பது வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஜாவா, பாலி, போர்னியோ ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஓவியங்களில் விநாயகர் இடம் பிடித்திருப்பதின் ரகசியம் இதுதான். பர்மா, கம்போடியா, தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளிலும்கூட விநாயகர் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்து மதம் மட்டுமல்லாமல், பெளத்தமும் ஜைனமும்கூட விநாயகருக்கு மிக முக்கியமான இடத்தை வழங்குகின்றன.
ஓம் என்கிற பிரணவ மந்திரத்தின் வடிவம்தான் விநாயகர் என்று கருத்தப்படுகிறார். ஓம் என்கிற பிரணவ ஒலியிலிருந்துதான் உலகம் உருவானது என்கிற வேதவாக்கியத்தின் அடிப்படையில் பார்த்தால் விநாயகர் முழுமுதற் கடவுள் ஆகிறார். தடை அகற்றுபவர் என்பது மட்டுமல்லாமல், விநாயகர் புத்தியின் (அறிவு) அதிபதியாகவும் கருதப்படுகிறார். அதனால்தான் விநாயக சதுர்த்தி இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஏழை, பணக்காரர் என்கிற வித்தியாசம் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் விநாயக சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாடுவதின் காரணமே இதுதான்.
விநாயக சதுர்த்தி கொண்டாட்டம் இந்த அளவுக்கு பிரபலமானதற்கு, இந்திய சுதந்திரப் போராட்டமும் ஒரு முக்கியமான காரணம். அதற்கு முன்னால் விநாயக சதுர்த்தி வீடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த நிலைமாறித் தெருத்தெருவாக விநாயக சதுர்த்தி கொண்டாடப்படத் தொடங்கியது 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான். அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, அரசுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாமல் மக்களைத் திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்து மதத்தின் வழி வந்த ஜாதியப் பாகுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது.
1893-இல் மகாராஷ்டிரத்தில் கணேஷ் சதுர்த்தியைப் பயன்படுத்தி மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் லோகமானிய பாலகங்காதர திலகர். அனைவருக்குமான கடவுளாகப் பிள்ளையார் இருந்ததால் விநாயக சதுர்த்தியைப் பயன்படுத்தி அதன் மூலம் அனைத்துத் தரப்பினரையும் இணைத்து, அந்த சக்தியை விடுதலை வேள்விக்கு பயன்படுத்த முற்பட்டார் அவர். தெருவோரங்களிலும், மைதானங்களிலும் பெரிய பந்தல் அமைத்து அதில் விநாயக சதுர்த்தியின்போது வழிபாடு நடத்தும் முறை திலகர் பெருமானால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல, 
விநாயக சதுர்த்தி முடிந்த 10-ஆவது நாள் பந்தலில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் உருவத்தை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கும் முறையையும் அறிமுகப்படுத்தியவர் அவரே. 
மகாராஷ்டிராவில் 1893-இல் திலகரால் உருவாக்கப்பட்ட விநாயக சதுர்த்திக் கோலாகலம் இப்போது இந்தியா முழுவதும் பரவி விட்டிருக்கிறது. எல்லா மதங்களும் தங்களது மதத்தை பரப்பவும், தங்களது மதத்தினரை ஒருங்கிணைக்கவும் முற்படும்போது இந்துக்களும் தங்களது மதத்தினரை ஒருங்கிணைத்து விநாயக சதுர்த்தி விழாக் கொண்டாடுவதில் தவறில்லை. அப்படி கொண்டாடுவது மற்றவர்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ, பொதுமக்களுக்கோ பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. 
தெய்வமாகக் கொண்டாடப்பட வேண்டிய விநாயகரைக் கிரிக்கெட் விநாயகர், கால்பந்து விநாயகர், கார்கில் போர் விநாயகர் என்றெல்லாம் கொச்சைப்படுத்தி வேடிக்கைப் பொருளாக்குவது வேதனை அளிக்கிறது. அளவுக்கு அதிகமான உயரத்தில் பிள்ளையாரை அமைப்பதும், அதை பளு தூக்கி (கிரேன்)யின் மூலம் கொண்டுபோய்க் கடலில் கரைப்பதும் இறைச் சிந்தனையின் பாற்பட்டது என்று எப்படி ஏற்றுக்கொள்வது? 
மண்ணில் விநாயகர் செய்யும்போது அதன் மூலம் மண்பாண்டம் செய்யும் தொழிலாளிகளுக்கு பிழைப்பு கிடைக்கும் என்று கருதலாம். ஆனால், பிளாஸ்டர் ஆப் பாரிஸில் பிள்ளையார் உருவத்தைச் செய்வதும், அதில் ஈயம், பாதரசம் உள்ளிட்டவை கலந்த வண்ணப்பூச்சுக்களின் மூலம் வர்ணம் கொடுப்பதும் எந்தவித பக்தியின் பாற்பட்டவை என்று புரியவில்லை.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட கணக்கிலடங்காத விநாயகர் சிலைகள் கோமதி நதியில் கொண்டு போய் போடப்பட்டிருக்கின்றன. இவை மக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகும் என்பது மட்டுமல்ல, அவற்றின் வண்ணப்பூச்சுக்களில் இருக்கும் ஈயமும், பாதரசமும் நதி நீரை மாசுபடுத்தி, உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகி இருக்கின்றன. இந்தியாவிலுள்ள எல்லா குளங்களும் ஆறுகளும் இதே பிரச்னையைத்தான் எதிர்கொள்கின்றன. நதிகள், நீர்நிலைகள் மட்டுமல்லாமல் விநாயகர் சிலைகளால் கடலும்கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.
விநாயக சதுர்த்தி என்கிற பெயரில் நடத்தப்படும் அவசியமற்ற ஆர்ப்பாட்டங்கள் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், விநாயகர் என்கிற மிக உயரிய ஆன்மிக தத்துவத்தைக் கேவலப்
படுத்துவதாகவும் மாற்றியிருக்கின்றன. இது ஏற்புடையதல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com