மாலத்தீவில் ஆட்சி மாற்றம்!

கடந்த செப்டம்பர்

கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவு ஆறுதல் அளிக்கிறது. மாலத்தீவு முற்போக்குக் கட்சி தலைவரான அதிபர் அப்துல்லா யாமீனின் "மீண்டும் அதிபர்' கனவு கலைந்துவிட்டது. அப்துல்லா யாமீன் வெற்றிபெற முடியவில்லை என்பதை மக்களாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்றுதான் கூறவேண்டும்.

அப்துல்லா யாமீனுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட இப்ராஹிம் முகமது சோலீ 58% வாக்குகள் பெற்று மாலத்தீவின் ஏழாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நவம்பர் 17-ஆம் தேதி  பதவியேற்க இருக்கும் சோலீ, மாலத்தீவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மூன்றாவது அதிபர் என்கிற பெருமைக்கும் உரியவர் ஆகிறார். 

2013-இல் அன்றைய அதிபர் முகமது நஷீதைத் தோற்கடித்துப் பதவிக்கு வந்த அப்துல்லா யாமீன் படிப்படியாக சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். முகமது நஷீத் மீது ஆதாரமில்லாத பல வழக்குகளைத் தொடுத்தது மட்டுமல்லாமல், அவர் மாலத்தீவை விட்டு வெளியேறி இலங்கையில் தஞ்சமடைய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார். 

தேர்தல் வரப்போவதை உணர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதலே அதிபர் அப்துல்லா யாமீன், தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சூழலை உறுதிப்படுத்த முற்பட்டார். பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவசர நிலை அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐவரில் இருவர் இவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்து, வரலாற்று ரீதியாகத் தொடர்புடைய இந்தியாவுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினார் அப்துல்லா யாமீன்.

யாமீனின் சர்வாதிகாரப் போக்கை இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவையும் கூட வன்மையாகக் கண்டித்தன. முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் தொடராமல் போனால், மாலத்தீவின் மீது பொருளாதாரத் தடை விதிப்போம் என்று அமெரிக்கா எச்சரித்தது. தேர்தலுக்கு முன்னால்,  தனது ஆதரவாளரான அகமது ஷெரீஃப் என்பவரை தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்தது மட்டுமல்லாமல், சர்வதேசப் பார்வையாளர்கள் மாலத்தீவில் நடக்கும் தேர்தலைக் கண்காணிப்பதற்குத் தடையும் விதித்தார் யாமீன். வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான அனுமதி கடுமையாக்கப்பட்டது. எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைமையகம் சோதனையிடப்பட்டது. இப்படியெல்லாம் தனது மறு தேர்வை உறுதிப்படுத்திக்கொள்ள அப்துல்லா யாமீன் எடுத்த அத்தனை முயற்சிகளையும் முறியடித்து, மாலத்தீவு மக்கள் அவரைத் தோல்வியடையச் செய்திருக்கின்றனர்.

மாலத்தீவின் தேர்தல் முறை சற்று வித்தியாசமானது. பல சுற்றுத் தேர்தல்களின் மூலம், இறுதிச் சுற்றில் இருவர் மட்டும் போட்டியிடும்  முறை பின்பற்றப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக வேறு வேட்பாளர் யாரையுமே நிறுத்தாமல் இப்ராஹிம் முகமது சோலீயை மட்டும்  மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறக்கிவிட்டதால், அதிபர் அப்துல்லா யாமீன் நேரடிப் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம்  மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டி போடப்போவதாக அறிவித்திருந்த முன்னாள் அதிபர் முகமது நஷீத் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு, இப்ராஹிம் முகமது சோலீயை களமிறக்கியது அதிபர் அப்துல்லா யாமீனின் தோல்வியை உறுதிப்படுத்தியது.
அதிபர் அப்துல்லா யாமீன் சீனாவுக்கு நெருக்கமானவர் என்பதால், அந்த நாட்டுடன் பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களை செய்துகொண்டிருக்கிறார். அதனடிப்படையில் மாலத்தீவின் வளர்ச்சியை முன்னிறுத்தி, தனது தேர்தல் பிரசாரத்தை நடத்திய அதிபர் யாமீன், எதிர்க்கட்சிகளை இந்தியாவின் ஆதரவாளர்கள் என்று வர்ணிக்கவும்,  விமர்சிக்கவும் தயங்கவில்லை. தனது அரசு இஸ்லாமை முன்னிறுத்த முனைப்புடன் செயல்படுவதை  விரும்பாத கிறித்தவப் பாதிரிமார்களின் ஆதரவுடன் இயங்கும் எதிர்க்கட்சிகள் தன்னை வீழ்த்த முயற்சிக்கின்றன என்பது  அவரது  குற்றச்சாட்டாக இருந்து வந்தது. 

மாலத்தீவு ஏறத்தாழ 30 ஆண்டுகள்  மாமூன் அப்துல் கயூமின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. 2008-இல் அந்த சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டினார் முகமது நஷீத். இவர்  இந்திய ஆதரவாளர் என்பது

வெளிப்படையாகவே தெரிந்த உண்மை. நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட மாலத்தீவு என்கிற  சிறிய தீவு எங்கேயோ இருக்கும் சீனாவை விட அண்டை நாடான இந்தியாவை அனுசரித்து நடப்பதுதான் அந்த நாட்டின் நிரந்தர வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்கிற அவரது கருத்தை மக்கள் ஆதரித்தார்கள்.

2008-இல் இருந்த அதே நிலைமைதான் 2018-லும்  காணப்படுகிறது. முகமது சோலீயின் தலைமையில், பலவீனமடைந்திருக்கும் இந்தியாவுடனான உறவை மாலத்தீவு  வலுப்படுத்த முற்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவும், மாலத்தீவின் வளர்ச்சியையும், அந்த நாட்டின் ஜனநாயக மரபுகள் பேணப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.  இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவதை அதிகரித்த பொருளாதாரக் கூட்டுறவு

உறுதிப்படுத்தும் என்பதில்  ஐயப்பாடு தேவையில்லை. இந்த எதிர்பார்ப்பு பரவலாகவே இருக்கிறது. இந்துமகா சமுத்திரப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருக்க  மாலத்தீவில் அதிபர் சோலீ அடைந்திருக்கும் வெற்றி உதவும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி,  இந்துமகா சமுத்திரத்திலுள்ள தீவுகளான இலங்கையும், மாலத்தீவும் இந்தியாவின் நட்பு நாடாகத் தொடர்வதை  உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் நமது அரசுக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com