மொழிக் கொள்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் - Dinamani - Tamil Daily News

மொழிக் கொள்கையில் ஏற்பட்ட குழப்பங்கள்

First Published : 20 July 2013 01:40 AM IST


உலகமெங்கும் கல்விமொழிக் கொள்கையை அரசியலாக்கவில்லை. தமிழகத்தில் மட்டுமே கல்விமொழிக் கொள்கை அனைத்தும் அரசியலாக்கப்பட்டன.

இந்தியை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மாநில ஆட்சி கைப்பற்றப்பட்டது. இது ஆங்கிலத்தை ஆதரிக்கும் இயக்கமும் ஆயிற்று. இந்தியை வரவிடாமல் தடுக்கும் கேடயம் என விளக்கப்பட்டது.

"தமிழ் வாழ்க' என்ற முழக்கம் வானை முட்டியது. ஆயினும் ஆங்கில மோகம் வளர்க்கப்பட்டதே தவிர, தமிழைப் பாடமொழியாக்க, அதனை நிலைநிறுத்தப் பல வகையிலும் சிந்தித்துத் திட்டமிட்டுச் செயல்படவில்லை.

இது "வாழ்த்திக்கொண்டே, வீழ்த்துவோம்' என்பது போலாயிற்று.

இவை நீதிக் கட்சியின் தொடர்ச்சியாகும். பதவிப் போட்டியால், பிராமணரல்லாதவர்கள் பிராமணர்களைப்போல ஆங்கிலம் கற்று, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் உயர் பதவிகளில் அமர வேண்டும் எனப் போராடலாயினர். பிராமணரல்லாதார் இயக்கம் பிறகு நீதிக்கட்சியானது. இவர்கள் "ஆங்கிலம்' தங்களுக்கு அவசியம் என எண்ணினர். பெரியாரும் ஆங்கிலத்தையே கல்வி மொழியாக்கப் பெரிதும் வாதிட்டார்.

"ஆரிய மாயை'யிலிருந்து தமிழரை விடுவிக்க முயன்ற அண்ணாவும் ஆங்கில மாயையில் தமிழரைச் சிக்க வைக்க வேண்டியவராயினார். இதனால் ஆங்கில மோகம் திராவிட இயக்கத்தில் தொடரலாயிற்று.

இயற்கையாய் அமைய வேண்டிய, தாய்மொழி பற்றிய உணர்வும் தொலைநோக்குப் பார்வையும் அமையாமல், ஆங்கில மோகம் தமிழர்களை அடிமைப்படுத்திவிட்டது.

ஆங்கிலத்தை ஒரு கருவி மொழியாய், வேலை வாய்ப்புக்கு உதவும் துணைமொழியாய் மட்டும் கொள்ளாமல், அதனையே தாய்மொழியிடத்தில் வைத்துப் போற்றும் நிலை உருவானது.

வெளியே "தமிழ் வாழ்க' என்ற முழக்கம். உள்ளே, தமிழிருக்க வேண்டிய இடத்திலும் ஆங்கிலத்தை வைத்து வளர்க்கும் மனநிலை. இவ்வாறு இது ஒரு தலைகீழ்ப் பாடமானது.

அண்ணா ஆட்சிபீடம் ஏறியதும் முன்பிருந்த மும்மொழித் திட்டத்தை நீக்கினார். தமிழும் ஆங்கிலமுமே என்ற இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

கல்விக் கொள்கையில் இது ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்பட்டது. இந்திய மொழிகளில் இந்தியும் ஒன்று. அது அனைத்து இந்திய மொழிகளுடனும் சமமாகக் கருதப்பட வேண்டும். பிற மொழிகளை அது இரண்டாமிடத்திற்குத் தள்ளிவிடக் கூடாது. ஆங்கிலமே இந்திய அரசின் ஆட்சி மொழியாய் பொது மொழியாய் நீடிக்க வேண்டும். இதனால் இந்திய மொழிகளிடையே ஏற்றத்தாழ்வு வராது; அனைத்தும் சமமாகக் கருதப்படும்.

இதனை வலியுறுத்தியதால் நேருவும், "பிற மாநிலத்தவர் இந்தியை ஏற்கும் காலம்வரை, ஆங்கிலமே நீடிக்கும்' என அறிவித்தார்.

ஆயினும் ஓர் இந்திய மொழிக்கு அடிமை ஆகாமல் காத்த இது, அயல் நாட்டு மொழிக்கு, நம்மை அடிமையாக்கிய மொழிக்கு மீண்டும் அடிமையாக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது.

பிற மாநிலங்களில் எல்லாம் இந்தியை ஒரு தொடர்பு மொழியாய் மட்டுமே கற்றனர்; தாய்மொழிவழிக் கல்விக்கே முதலிடம் தந்தனர். தமிழகத்தில் மட்டுமே இந்தி ஒரு தொடர்பு மொழியாய் ஏற்காமல் தவிர்க்கப்பட்டது. ஆயினும் போதிய அளவு ஆங்கிலப் புலமை அமைய உளவியல்படி வாய்ப்பில்லை. இவ்வாறு இரண்டும்கெட்டானாக ஆன நிலையில், ஆங்கிலத்தை வலிந்து, மனப்பாடக் கல்வியாக்கி, தமிழகம் தடுமாறுகிறது.

இருமொழிக் கொள்கை பற்றிய அரசு ஆணையில், முதல்பாகம் தாய்மொழியும் அல்லது பிற இந்திய மொழிகளில் ஒன்றும் எனக் குறிக்கப்பட்டது (போதிய அளவு சிறுபான்மையர் இருந்தால் அவர்களுக்குத் தங்கள் தாய்மொழி பாடமாகும்படி உரிமை தரும் வாசகம் இது).

இரண்டாம் பாகத்தில் ஆங்கிலம் அல்லது பிற அயன்மொழிகளில் ஒன்று எனக் குறிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தில் "ஆங்கிலம்' எனத் தெளிவாகக் குறிக்கப்பட்டு முதல் பாகத்தில் தமிழ் என்று அதுபோலக் குறிக்கத் தவறிவிட்டனர். இதனால் முதல் பாகத்தில் தமிழை அறவே விட்டுவிட்டு, பிரெஞ்சு, சமஸ்கிருதம்போலும் பிறிதொரு மொழியே பலராலும் பின்பற்றப்பட்டது. அதாவது, தமிழை ஒரு பாடமாகக்கூடப் படிக்காமல் கைவிட்டுவிட்டு, பட்டப்படிப்பை முடித்து வெளியேற வாய்ப்பானது. அண்ணா காலமாகிவிட்டதால், இக் குறையைப் போக்க ஆயிரம் முறை எழுதியும் பேசியும் அறிவுறுத்தியும் பலன் இல்லை.

அடுத்ததாக, ஆங்கில வழி மெட்ரிக் பள்ளிகளை எல்லையின்றி வெள்ளம்போல் பெருக வாய்ப்பளித்தமை. பள்ளிக் கல்வி இயக்குநர்களே ஏலம் விடுவதுபோல் "எல்லோரும் வாருங்கள்! ஆங்கில வழி மெட்ரிக் பள்ளிகளை சுயநிதிப் பள்ளிகளாகத் தொடங்குங்கள்! அரசிடம் எவ்வித உதவியும் கேட்காதீர்கள்! நீங்களே பாடத்திட்டம் வகுத்து, மாணவர்களிடம் கட்டணம் பெற்று நடத்துங்கள்!'' என்று அறிவித்தனர்.

இதைப் பார்த்த வணிகர்கள் கல்வியை முதலீடில்லாத ஒரு லாபம் தரும் தொழிலாக மாற்றிட இது வழியமைத்துக் கொடுத்தது.

சீருடை முதல் கட்டடங்கள் வரை, சிறு முதலீட்டில் தொடங்கிக் கவர்ச்சிகளைக் காட்டி ஒரு மாபெரும் கல்வி வாணிகம் தமிழகத்தில் நடைபெறலாயிற்று.

தமிழ் மிகத் தாழ்வாக இழிவுபடுத்தப்பட்டது. அதனை நாலாந்தர மொழிபோல் மக்களும் மாணவர்களும் பார்க்கலாயினர். இப் பள்ளிகளால் நூற்றுக்கு மூவர் நால்வர் நன்மை பெறக்கூடும்.

பிறரெல்லாம் ஆங்கிலத்திலும் நிறைந்த புலமை பெறவில்லை; தமிழைக் கற்காமலே கைவிட்டு, அவர்களின் படிப்பு, அரைகுறைக் கல்வியானது. தமிழ் இன்று ஒரு கலப்பட மொழியானதற்கும், பிழைபடத் தமிழை எழுதுவது பெருகிப் போனதற்கும் இப் பள்ளிகளே அடித்தளமிட்டன.

பிற இந்திய மொழிகளையும், உலக மொழிகளையும்போல் தமிழைத் தொடக்கக் கல்வியில் பாட மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் ஆக்கக் கோரி தமிழார்வலர்கள் போராடினர்.

மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியாம் தமிழ் ஒன்றே பாடமொழியாகவும் பயிற்றுமொழியாகவும் ஆக்கப்பட வேண்டுமென்று சாகும் வரை பட்டினிப் போர் எல்லாம் நடத்தப்பட்டது. அரசு இதனை மடைமாற்ற, ஒரு குழு அமைத்தது. அக்குழு தந்த பத்துப் பரிந்துரைகளில் முதல் பரிந்துரை இதனை, ஒரு தெளிவான, வரையறுத்த சட்டமாக்க வேண்டும் என்பது.

முன்னதாக பல அரசாணைகளின் மூலம், தொடக்கக் கல்வியில், ஐந்து பாடத்தில் இரண்டு ஆங்கிலம் மூன்று தமிழ் வழி என்றும் பிறகு மூன்று ஆங்கிலம் இரண்டு தமிழ் என்றும் மாற்றி மாற்றி அரசு ஆணைகளைப் பிறப்பித்தது.

முன்பு சுட்டிக்காட்டியதுபோல் தொடக்கக் கல்வி முழுவதும் தமிழாக அமையச் சட்டமியற்றாததால், உயர் நீதிமன்றம் தமிழைப் பாடமாக்கும் ஆணைகளைச் சுட்டிக்காட்டி அரசின் ஆணையைத் தடை செய்தது.

ஆங்கிலவழிப் பள்ளிகளுக்குச் சமமாக அரசுப் பள்ளிகளை வளர்க்க வேண்டும். கட்டடம், சீருடை, வாகன வசதி முதலான கவரும் தன்மையுடைய, புறத்தோற்றத்தாலேயே, அவைகள் மக்களிடம் செல்வாக்குப் பெறுகின்றன.

அரசுப் பள்ளிகளும் மிகக் குறைவாகக் கட்டணம் பெற்று மிகச் சிறப்பாக வளர்ந்தனவாயின், அது மிகுந்த நாகரிகமான போட்டியாக அமைந்து அரசுப் பள்ளிகள் பற்றிய நன்மதிப்பை மக்களிடம் ஏற்படுத்தும்.

 

கட்டுரையாளர்: தமிழறிஞர்.

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.