"கல்வி சிறந்த தமிழ்நாடு' - Dinamani - Tamil Daily News

"கல்வி சிறந்த தமிழ்நாடு'

First Published : 30 August 2013 12:55 AM IST


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி நான்கு பணியாளர்களுக்கான போட்டித் தேர்வில், இதுவரை இல்லாதவாறு, பன்னிரண்டு இலட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். தேர்வெழுதிய இலட்சக்கணக்கானவரின் கனவு நனவாவது, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரேஒரு வினாத்தாளைப் பொறுத்ததே. ஆனால் அதிலும் பிழையான வினாக்களும் விடைகளும் இடம்பெற்றிருப்பது, தேர்வர்களின் நெஞ்சில் உதைத்ததுபோல் உள்ளது.

இந்த விடைகள் தாற்காலிகமானவை (டென்டேடிவ் கீ ஆன்சர்) என ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு வினாவுக்குத் தாற்காலிக விடையென்றும் நிரந்தரமான விடையென்றும் இருவகையான விடைகள் உண்டா?

அதுமட்டுமின்றி, விடைகள் தொடர்பாக ஆட்சேபம் இருந்தால், ஐந்து நாள்களுக்குள் ஆணையத்திற்குத் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர். அப்படியானால், புலமை மிக்கவர்கள் வினா-விடை தயாரித்த வல்லுநர்களா? அதைவைத்துத் தேர்வெழுதிய தேர்வர்களா?

தொகுதி நான்கு தேர்வு பத்தாம் வகுப்புக் கல்வியை அடிப்படையாகக் கொண்டது.

இருநூறு வினாக்களுக்கு முந்நூறு மதிப்பெண் கொண்ட இதற்கான வினாத்தாளில் செம்பாதியாக நூறு வினாக்கள் தமிழ்ப் பாடத்திற்குரியவை.

தேர்ச்சிபெற தமிழே துணையாகும் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் வினாத்தாளின் தமிழ்ப்பகுதியில் பல பிழைகள் இடம்பெற்றுள்ளன.

தேர்வாணைய வினாத்தாளில் "மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப்போல விரிவடைந்து' என்று ஒரே வரியில் பாடல் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பாடலுக்குரிய விடைகளில் பொருந்தாதது எது எனக்கேட்டு, அடிமோனை, அடியெதுகை, அடிஇயைபு, சீர்மோனை என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வினாவுக்கு ஆணையம் அறிவித்துள்ள விடை அடிஇயைபு என்பது. அதாவது, இப்பாடலடியில் அடிஇயைபு இல்லையென்பதாகும். முதலில் பாடலை இரண்டடிகளில் கொடுத்ததால்தான் அடிமோனை, அடி எதுகை, அடி இயைபு ஆகியவற்றைத் தேர்வர்கள் கண்டறிய முடியும். பாடலின் அடிதோறும் அமைவது அடி மோனை முதலியன. ஓரடியில் உள்ள சீர்களில் அமைவது சீர் மோனை முதலியன.

எனவே பாடல் அமைப்பு தவறாகத் தரப்பட்டுள்ளது. அது ஒருபுறம் இருக்க, இப்பாடலடியில் அடி எதுகையும் இல்லை. எனவே அதுவும் பொருந்தாததே ஆகும். இவ்வினாவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியாக இருக்க, ஆணையம் ஒன்றைமட்டும் அறிவித்துக் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. வினாவிலும் பிழையிருக்கிறது. அறிவித்த விடையிலும் பிழையிருக்கிறது.

மற்றொரு பிழையான வினா "தித்திக்கும் தெள்ளமுதாய் தெள்ளமுதின்' என மூன்று சீர்களில் ஓரடி கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே தவறாக உள்ளது. நான்கு சீர்களையுடைய அளவடியைக் கொடுத்துத்தான் தொடை கேட்பது வழக்கம். இதில் "எதுகை வந்துள்ளது', "மோனை மட்டும் வந்துள்ளது', "எதுகை, மோனை, இயைபு வந்துள்ளன', "எதுகையும் மோனையும் வந்துள்ளன' என்று நான்கு விடைகள் கொடுத்து, எது சரியானது என வினா கேட்கப்பட்டுள்ளது, இவற்றுள் "எதுகையும் மோனையும் வந்துள்ளன' என்பதை சரியான விடையென ஆணையம் அறிவித்துள்ளது. இது எப்படிச் சரியாகும்?

கொடுக்கப்பட்டதோ மூன்று சீர்கள். முதற் சீரை வைத்துத்தான் எதுகை மோனை காண முடியும். அப்படியிருக்க, இதில் எதுகை எப்படி அமைந்ததென்று தெரியவில்லை. மோனை மட்டுமே இவ்வடியில் உள்ளது.

இப்படிப் பிழையான வினாக்களையும் விடைகளையும் அடுத்தடுத்துத் தந்திருப்பது தேர்வர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.

"ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய தூய நல்லறம் என்று இங்கு இணையன காப்ப' என்னும் கம்பராமாயண அடிகளைக் கொடுத்து "சீதையை அழியாது காப்பாற்றியவை எவை' என பன்மையில் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு "கற்பும் அருளும்' என்று ஆணையம் விடை தந்துள்ளது. கொடுக்கப்பட்டுள்ள இரண்டு அடிகளையும் நோக்க, "சீதையின் கற்பும் தலைவனாகிய இராமனின் அருளும் தூய நல்லறனும்தாம் சீதையைக் காப்பாற்றின' என்பது பொருளாகும். சான்றோர் பலரும் இப்படித்தான் உரை எழுதியுள்ளனர். அதன்படி "கற்பும் அருளும் அறனும்' என விடை தந்திருக்க வேண்டும். வினா, விடை இரண்டிலும் ஏற்பட்டுள்ள மூன்றாவது தவறு இது.

ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல்லறிதல் என்பது ஒருவகை வினா. இதில் தரப்பட்டுள்ள "Fangle', 'Faintail' என்னும் ஆங்கிலச் சொற்கள், சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் கூடக் காணப்படவில்லை. இது தேர்வர்களின் தகுதியறியாது கேட்கப்பட்ட வினாவாகும்.

அதுபோலவே முதல் தாளில் பகுபதம், பகாப்பதம் பற்றி நான்கு செய்திகளைத் தந்து இவற்றில் எவை தவறானவை எனக் கேட்கப்பட்டுள்ளது.

இவற்றில் மூன்று செய்திகள் தவறாக இருக்க, விடைக்குறிப்பில் அதற்கு வாய்ப்பு காணப்படவில்லை. இது வினாவில் ஏற்படட தவறு.

அதேபோன்று, இரண்டாம் தாளில் "பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க' என்னும் செய்யுள் தொடரைக் கொடுத்து அதில் உள்ள தொடை விகற்பத்தைக் கண்டறிய வினவப்பட்டுள்ளது. தொடரின் கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைக்குறிப்புகளும் தவறாகவே உள்ளன.

பல இலட்சம் பேருக்குத் தேர்வை நடத்துவதில் ஆற்றல் பெற்றுள்ள ஆணையமும் வாரியமும் பத்து பாட வல்லுநர்களைக் கொண்டு, பிழையில்லாத வினாத்தாளை வெளிக்கொணர முடியாதா?

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.