ஜூன் 10-இல் சிறப்பு பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு: மருத்துவத் தேர்வு வாரியம் அறிவிப்பு

மருத்துவத்தில் டி.எம்., எம்.சி.எச்., பி.டி.சி.சி. போன்ற சிறப்பு பட்ட மேற்படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (என்இஇடி), அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மருத்துவத்தில் டி.எம்., எம்.சி.எச்., பி.டி.சி.சி. போன்ற சிறப்பு பட்ட மேற்படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (என்இஇடி), அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வை ஒற்றைச் சாளர முறையில் தேசிய மருத்துவத் தேர்வு வாரியம் (என்பிஇ) நடத்தி வருகிறது.  இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பை தேசிய மருத்துவத் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின்படி, டி.எம்., எம்.சி.எச்., பி.டி.சி.சி. போன்ற சிறப்பு பட்ட மேற்படிப்புகளில் 2017-ஆம் ஆண்டில் சேர்வதற்கான அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு (என்இஇடி), பல்வேறு நகரங்களில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வு மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ராணுவ மருத்துவக் கல்லூரிகளில் உள்ள டி.எம்., எம்.சி.எச்., பி.டி.சி.சி. போன்ற சிறப்பு பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இதுதவிர, இந்தப் படிப்புகளுக்கு மாநில அளவிலோ அல்லது கல்லூரி அளவிலோ நடத்தப்படும் நுழைவுத் தேர்வு செல்லாது. ஆனால், தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, சண்டீகரில் உள்ள பிஜிஐஎம்இஆர், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீசித்ரா, பெங்களூரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்தத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கணினி அடிப்படையில் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வில், எம்.டி., எம்.எஸ். மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான பாடத்திட்டத்தில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையில் 200 கேள்விகள் கேட்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com