பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச்
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதியும் தொடங்குகின்றன. இதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2 தொடங்கி மார்ச் 31 வரை காலை 10 முதல் பகல் 1.15 மணி வரையும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 8 தொடங்கி மார்ச் 30 வரையும்  காலை 9.15 தொடங்கி நண்பகல் 12 மணி வரை நடைபெறுகின்றன.  வினாத்தாளைப் படித்துப் பார்க்க 10 நிமிடங்களும், விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படுகின்றன. கற்றல் குறைபாடு உடையவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது.
முன்கூட்டியே தொடங்கும் தேர்வு: 2015-இல் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 5-ஆம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 19-ஆம் தேதியும் தொடங்கின. 2016-இல் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 4-ஆம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 15-ஆம் தேதியும் தொடங்கின. நடப்புக் கல்வியாண்டில் முன்கூட்டியே தொடங்குகின்றன. இதுவரையிலும் இரு தேர்வுகள் தொடங்கி முடியும் தேதிகள் இடையே பெரிய அளவிலான இடைவெளி இருக்கும். ஆனால், நடைபெற உள்ள பொதுத் தேர்வுகள் அடுத்தடுத்த வாரங்களில் தொடங்கி, ஒரு நாள் இடைவெளியிலேயே நிறைவடைய உள்ளன.

போதுமான இடைவெளி: மொழி, ஆங்கிலத் தேர்வுகளுக்கு அதிகமான விடுமுறை இல்லை.
இருப்பினும், பிளஸ் 2 முக்கிய பாடங்களில் வேதியியல் முதலாவதாக நடக்கிறது. அந்தப் பாடத்துக்குத் தயாராவதற்கு 5 நாள்களும், இயற்பியலுக்கு 7 நாள்களும், கணிதத்துக்கு 5 நாள்களும், உயிரியலுக்கு 3 நாள்களும் இடைவெளி கிடைத்துள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வில் சமூக அறிவியலுக்கு அதிகபட்சமாக 4 நாள்கள் இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் நடத்த திட்டமிட வேண்டும்: பொதுத் தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் மற்ற வகுப்புகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆகவே, இப்போது இரு பொதுத்தேர்வுகளும் ஒரே நாள் இடைவெளியிலும், ஒரே மாதத்திலும் நிறைவடைகிறது.
இனி வரும் காலங்களில் ஒரே நாளிலேயே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்களை அருகருகே அமர வைத்து தேர்வு எழுதும் முறையைக் கொண்டு வந்தால், கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்கிறார் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் டி.அருளானந்தம்.
எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்? அண்மையில் சென்னையைத் தாக்கிய புயலால் தேர்வுத் துறை அலுவலகத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கிறது. இதனால், தேர்வு எழுதும் மாணவர்களின் விவரத்தை தொகுப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் சுமார் 8.38 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வையும், 10.72 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com