விறுவிறுப்படையும் தனியார் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக
விறுவிறுப்படையும் தனியார் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை விறுவிறுப்படைந்துள்ளது.
  நாடு முழுவதும் "நீட்' (மருத்துவ பொது நுழைவுத் தேர்வு) நடத்தப்பட்டு, மாணவர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி, செப். 30-க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்பதால், தனியார் மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களும் மாணவர்களைச் சேர்க்கும் கலந்தாய்வுக் கட்டத்தை அடைந்துள்ளன.
கட்டணம் குறித்து உத்தரவில்லை: தனியார் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழங்களும் "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அரசு இடங்களைப் பொருத்தவரை அந்தந்த மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தைப் பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
"நன்கொடை' மறைந்து விட்டதா? கடந்த ஆண்டுகளில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் இடங்களும் வெளிப்படைத்தன்மையான கட்டணம் ஏதுமின்றி "நன்கொடை' என்ற பெயரில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பெறப்பட்டு தன்னிச்சையாக நிரப்பப்பட்டன.
ரூ.15 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை...: இந்த ஆண்டு "நீட்' மதிப்பெண், ரேங்க் பட்டியல் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை காரணமாக "ஆன்-லைன்' முறையில் விண்ணப்பம், விண்ணப்ப தகவல் குறிப்பேடு, கல்விக் கட்டண விவரத்தை தனியார் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழகங்களும் வெளியிட்டுள்ளன.
 இதன்படி. எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்புக்கு கல்விக் கட்டணமாக ரூ.15 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரையும், உபகரணங்கள் உள்ளிட்ட இதர கட்டணங்களையும் இணையதளத்தில் அவை வெளியிட்டுள்ளன.
குறைபாடு என்ன? "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும்கூட, சேர விரும்பும் தனியார் கல்லூரி அல்லது தனியார்  பல்கலைக்கழகத்துக்கு தனியாக விண்ணப்பித்திருந்தால் மட்டுமே மாணவர் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது;
விண்ணப்பித்திருந்த சிலவற்றில் ஒரே சமயத்தில் கலந்தாய்வு அழைப்பு வரும் நிலையிலும் மாணவர்களுக்கு கஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 இனிவரும் காலங்களில் அரசு கலந்தாய்வைப் போன்று மொத்தம் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் ஒருங்கிணைந்த முறையில் கலந்தாய்வை நடத்தும் முறைக்கு மத்திய சுகாதாரத் துறையும் இந்திய மருத்துவ கவுன்சிலும் ஆவன செய்ய வேண்டும் என்பது பெற்றோர், மாணவர்களின் கோரிக்கையாகும்.
சிறந்த மாணவர்களுக்கு உதவ...:அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க ஆண்டுக்கு ரூ.13,600, பி.டி.எஸ். படிக்க ரூ.11,600 ஆகிறது. ஆனால், தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதே என்பதற்கு, கல்வியாளர்கள்-அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. இதை நிர்வகிக்க அரசுக்கு மாதம் ரூ.50 கோடி செலவாகிறது. எனவே அரசு  கல்லூரி கட்டணத்தில் (ரூ.13,600) தனியார் கல்லூரி அல்லது தனியார்  பல்கலைக்கழகத்தை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை.
எனினும், அவை தங்களது மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில் குறிப்பிட்ட சதவீத இடங்களை "நீட்' மதிப்பெண் அடிப்படையில் சிறந்த மாணவர்களுக்கு ஒதுக்கி குறைந்த கட்டணத்தை நிர்ணயத்தை செய்வதன் மூலம் உதவ முடியும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com