நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன்(ஏப்.5)
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன்(ஏப்.5) முடிவடைகிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து, நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்ற இணையத்தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன. மேலும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பும் கால அவகாசம் கடந்த மார்ச் 1-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 25 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை கூடுதலாக ஐந்து நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டனர். அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்று நள்ளிரவு 12 மணி வரை www.cbseneet.nic.in இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன்பின், ஆன் லைன் பதிவுகள் நிறுத்தப்படும்.

'தமிழக அரசு பள்ளி மாணவர்கள், இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தால், வரும் கல்வி ஆண்டில், மருத்துவச் சேர்க்கையில் சிக்கலை தவிர்க்கலாம்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com