ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு: ராஜஸ்தான் மாணவர் சாதனை: மாணவர்களே 'டாப்'

ஐஐடி, ஐஐஎஸ்சி, என்ஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) 360-க்கு 360 மதிப்பெண் பெற்று ராஜஸ்தான் மாணவர்
ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு: ராஜஸ்தான் மாணவர் சாதனை: மாணவர்களே 'டாப்'

ஐஐடி, ஐஐஎஸ்சி, என்ஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) 360-க்கு 360 மதிப்பெண் பெற்று ராஜஸ்தான் மாணவர் சாதனை படைத்துள்ளார்.
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலில் ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வும், பின்னர் ஏதாவது ஒரு ஐஐடி சார்பில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வும் நடத்தப்படும். இதில், ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேர முடியும்.
ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்று, அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. கல்வி நிறுவனங்களில் சேர முடியும். 2017 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் நேரடி எழுத்துத் தேர்வு ஏப்ரல் 2 ஆம் தேதி நடத்தப்பட்டது கணினி அடிப்படையிலான தேர்வு ஏப்ரல் 8, 9 தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் மொத்தம் 11 லட்சம் பேர் பதிவு செய்து, 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதினர். இவர்களில் தகுதிபெற்றோர் பட்டியல் www.jeemain.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களில் 2,21,427 பேர் ஐஐடி, ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாணவர் சாதனை: ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கம்பவுன்டரின் மகன் கல்பீத் வீர்வால் என்ற மாணவர் 360-க்கு 360 மதிப்பெண்கள் பெற்று முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இரண்டாம் இடத்தை 350 மதிப்பெண்களுடன் வாசு ஜெயின், அனன்ய அகர்வால் ஆகிய இரண்டு மாணவர்களும் பெற்றுள்ளனர்.
மாணவர்களே 'டாப்': இதில் முதல் 70 ரேங்குகளில் மாணவிகள் யாரும் இடம் பெறவில்லை. விருந்தா நந்தகுமார் ராதி என்ற மாணவி 321 மதிப்பெண்களுடன் 71 ஆவது ரேங்க் பெற்றுள்ளார்.
முதல் 1,000 ரேங்குகளில் 932 பேர் மாணவர்கள். 68 பேர் மட்டுமே மாணவிகள். அதுபோல 5,000 ரேங்குகளில் 4534 பேர் மாணவர்கள். 466 பேர் மட்டுமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com