நிரம்பாத பி.இ. இடங்கள்: முகவர்கள் மூலம் மாணவர்களுக்கு வலைவீசும் தனியார் பொறியியல் கல்லூரிகள்

பி.இ. இடங்களை நிரப்ப முடியாமல் திண்டாடும் தனியார் பொறியியல் கல்லூரிகள், முகவர்கள் மூலம் மாணவர்களை ஈர்க்கும்
நிரம்பாத பி.இ. இடங்கள்: முகவர்கள் மூலம் மாணவர்களுக்கு வலைவீசும் தனியார் பொறியியல் கல்லூரிகள்

பி.இ. இடங்களை நிரப்ப முடியாமல் திண்டாடும் தனியார் பொறியியல் கல்லூரிகள், முகவர்கள் மூலம் மாணவர்களை ஈர்க்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்காக, அண்ணா பல்கலைக்கழக ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களை மூளைச் சலவை செய்ய முயன்ற 50 -க்கும் மேற்பட்ட முகவர்களை, பல்கலைக்கழக அதிகாரிகள் போலீஸில் ஒப்படைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் வெகுவாக குறைய தொடங்கிய பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம், இந்த ஆண்டும் தொடர்கிறது. பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தவிர, மற்ற தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்திலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதம் மட்டுமே நிரம்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக ஒற்றைச் சாளர கலந்தாய்வு முடிய இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், இந்தத் தனியார் சுயநிதி கல்லூரிகள் கலந்தாய்வுக்கு அளித்த இடங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன.
இதன் காரணமாக, கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களை முகவர்கள் மூலம் மூளைச் சலவை செய்து, அவர்களை ஈர்க்கும் பணியை தனியார் கல்லூரிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த முகவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெளியே நடைபாதையில் நின்றபடி மாணவர்களை ஈர்ப்பதோடு மட்டுமின்றி, கலந்தாய்வு வளாகத்துக்கு உள்ளேயும் சென்று தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைச் செயலர் இந்துமதி கூறியதாவது:
பொறியியல் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளின் முகவர்களிடம் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக, பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஊழியர்களும் பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கலந்தாய்வு முடிகின்ற நேரத்தில், அதிக முகவர்கள் வரக் கூடும் என்பதால், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்தோம். இதன் மூலம் கடந்த 10 தினங்களாக வளாகத்துக்கு உள்ளே மற்றும் வெளியே என நாள் ஒன்றுக்கு 5 முகவர்களை கண்டறிந்து போலீஸில் ஒப்படைத்து வருகிறோம் என்றார்.
எச்சரிக்கை மட்டும்... இந்த நிலையில், இவ்வாறு பிடித்துக் கொடுக்கப்படும் முகவர்களை கோட்டூர்புரம் போலீஸார், எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பி விடுகின்றனர். இதனால் அந்த முகவர்கள் மீண்டும் வந்து மாணவர்களை ஈர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதுவரை 50 முகவர்களைப் பிடித்துக் கொடுத்திருக்கிறோம் என பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறினார்.
இதுகுறித்து மயிலாப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன் கூறியது:
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களை ஈர்க்கும் செயலில் இந்த முகவர்கள் ஈடுபடுகின்றனர் என்ற புகார் மட்டுமே கூறப்படுகிறது. மாணவர்களை ஏமாற்றியதாக அவர்கள் மீது புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.
எனவே, முதல்முறை பிடிபடும் இதுபோன்ற முகவர்களை எச்சரித்து மட்டும் அனுப்பி வருகிறோம். மாணவர்களை ஏமாற்றியதாகப் புகார் அளிக்கப்பட்டால் அந்த முகவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாணவர்களுக்குச் சலுகைகள்!
ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வருவதன் காரணமாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் அமைந்துள்ள பிரபல பொறியியல் கல்லூரிகள், பி.இ., இடங்கள் முழுமையாக நிரம்ப வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே படித்து வரும் மாணவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்று, இதுவரை நடைமுறையில் இல்லாத வகையில், வாரத்துக்கு இரண்டு நாள்கள் (ஞாயிறு, திங்கள்) விடுமுறை அளிப்பதுடன், வெளியூர் மாணவர்கள் சொந்த ஊருக்குச் சென்று வரும் வகையில், ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு வாரத்தில் மூன்று நாள்கள் (சனி, ஞாயிறு, திங்கள்) விடுமுறையை அறிவித்துள்ளது.
இதுபோல், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், மாணவர்கள் கேட்டுக்கொண்டதன்படி, இதுவரை மாலை 3.50 வரை இருந்து வந்த வகுப்புகளின் நேரத்தை, தற்போது மாலை 3.00 மணியாக மாற்றிக் கொள்ள அனுமதித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com