உயர் மருத்துவப் படிப்புகளுக்கு ஆக.12-இல் கலந்தாய்வு: பறிபோகிறதா தமிழக உரிமைகள்?

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு வரும் சனிக்கிழமை (ஆக.12) கலந்தாய்வு நடைபெறும் என்று மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் இயக்ககம் (டி.ஜி.ஹெச்.எஸ்) அறிவித்துள்ளது.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு வரும் சனிக்கிழமை (ஆக.12) கலந்தாய்வு நடைபெறும் என்று மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் இயக்ககம் (டி.ஜி.ஹெச்.எஸ்) அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவீத இட ஒதுக்கீடு பறிபோகும் சூழல் உருவாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 192 உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் உள்ளன. நாட்டிலேயே அதிக இடங்கள் உள்ளது தமிழகத்தில் மட்டும்தான். இதனையடுத்து மகாராஷ்டிரத்தில் 176, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 141, கேரளம் 129, தெலங்கானா 126, கர்நாடகம் 120 என மொத்தம் 1,215 இடங்கள் உள்ளன. மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே இடங்கள் உள்ளன. மேலும், 15 மாநிலங்களில் ஒரு உயர் சிறப்பு மருத்துவ இடம் கூட இல்லை.
இந்த இடங்களுக்கு மாநில அரசுகளே நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கையையும் நடத்தி வந்தன. தமிழகத்திலும் நுழைவுத்தேர்வு நடத்தி 50 சதவீத இடங்கள் அரசு மருத்துவர்களுக்கும், 50 சதவீத இடங்கள் பிற மருத்துவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. இந்தத் தேர்வை வெளிமாநிலத்தோர் எழுத முடியாத நிலை இருந்ததது.
இந்த நிலையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்தோருக்கு உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த கல்வியாண்டு (2016 - 2017) பொதுப் பிரிவுக்கு 50 சதவீத இடம் ஒதுக்கப்பட்டது. மீதம் உள்ள 50 சதவீத இடங்கள் அரசு மருத்துவர்களுக்கும் வழங்கப்பட்டது.
நீட் தேர்வு: இந்நிலையில், இந்தப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்தது. மேலும் தகவல் ஏட்டில் நீட் தேர்வை மத்திய அரசு நடத்தினாலும், கலந்தாய்வு அந்தந்த மாநிலங்களே நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 10, 11 தேதிகளில் தேர்வு நடைபெற்று, ஜூலை 15-ஆம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. முடிவு வெளியாகும் நேரத்தில் மத்திய அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளைத் தடுக்கும் வகையில், கலந்தாய்வை சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.ஹெச்.எஸ்) இயக்ககமே நடத்தும் என்று அறிவித்தது.
அவ்வாறு மத்திய அரசு கலந்தாய்வை நடத்தும்பட்சத்தில் தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்தாகும். இதற்கு மருத்துவர்கள் சங்கமும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சில மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நீட் தொடர்பான பிரச்னைகளுக்கு உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக குழப்பான மனநிலையிலேயே அந்த மாணவர்கள் உள்ளனர்.
கலந்தாய்வு தேதி அறிவிப்பு: இந்த நிலையில், இந்தப் படிப்புகளுக்கான நடைமுறைகள் புதன்கிழமை தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 12 -ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 13 -ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிமைகள் பறிப்பு: ஏற்கெனவே முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீடு பறிபோகும் சூழல் உருவானது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் மூலம் அவர்களின் இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டாலும், இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிவடைந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும், அடுத்த கல்வியாண்டில் மீண்டும் இதே பிரச்னை எழ வாய்ப்புள்ளது.
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா அல்லது நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுமா என்ற சிக்கலுக்கு இதுவரை விடை தெரியவில்லை. இந்த நிலையில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் அரசு மருத்துவர்கள் மற்றும் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com