பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று நிறைவு: 50 சதவீத இடங்கள் காலி

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.11) நிறைவுபெற உள்ள நிலையில் அனைத்துப் பிரிவுகளிலும் 50 சதவீத இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளது தெரிய

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.11) நிறைவுபெற உள்ள நிலையில் அனைத்துப் பிரிவுகளிலும் 50 சதவீத இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளது தெரிய வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நிறைவுபெறுகிறது. இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கு என ஒதுக்கப்பட்டிருந்த 1, 75,456 இடங்களில் 83,562 இடங்கள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. 91,894 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இதில் 90,930 இடங்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளின் இடங்களாகும்.
அனைத்துத் துறைகளிலும் 50 சதவீதம் காலி: பி.இ. துறைகளைப் பொருத்தவரை, அனைத்துத் துறைகளிலும் 50 சதவீத இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. அதிகபட்சமாக பி.இ. கணினி அறிவியல் பிரிவைப் பொருத்தவரை 51 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக பி.இ. இயந்திரவியல் பிரிவில் 48 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. பி.இ. மின்னணுவியல் தொடர்பியல் பிரிவில் 46 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. பி.இ. மின்னியல் மின்னணுவியல் பொறியியல் பிரிவில் 43 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. பி.இ. சிவில் பிரிவில் 31 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
95 ஆயிரம் இடங்கள் காலி?: இதன் பிறகு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 17 -ஆம் தேதியன்றும், காலியாக இருக்கும் அருந்ததியினர் (எஸ்சிஏ) பிரிவு இடங்களில் தாழ்த்தப்பட்ட (எஸ்சி) பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான சேர்க்கை ஆகஸ்ட் 18 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதன் பிறகும், நிரம்பாமல் காலியாக இருக்கும் இடங்களின் எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள். எனவே, ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வின் முடிவில் 95 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பாமல் காலியாக இருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com