பி.இ. கலந்தாய்வு நிறைவு: 89 ஆயிரம் இடங்கள் காலி: 37 கல்லூரிகளில் மட்டுமே 100 % சேர்க்கை

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெற்ற நிலையில், 89,101 இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. மொத்தம் 86,355 பேர் அரசு ஒதுக்கீட்டு
பி.இ. கலந்தாய்வு நிறைவு: 89 ஆயிரம் இடங்கள் காலி: 37 கல்லூரிகளில் மட்டுமே 100 % சேர்க்கை

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெற்ற நிலையில், 89,101 இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. மொத்தம் 86,355 பேர் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 570 -க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளபோதும், கடந்த ஆண்டைப் போலவே வெறும் 37 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திவந்த, பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 11) நிறைவடைந்தது. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும்போது 1லட்சத்து 75,456 பி.இ. இடங்கள் இடம்பெற்றிருந்தன.
கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது 86,355 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். அழைக்கப்பட்ட 1லட்சத்து 35,552 பேரில் 48,583 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை.
இதன் காரணமாக, தனியார் பொறியியல் கல்லூரிகளில் 88,161 இடங்கள், பல்கலைக்கழக சார்பு கல்லூரிகளில் 937 இடங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 3 இடங்கள் என மொத்தம் 89,101 இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2,003 மாணவர்கள் இந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 84,352 பேர் மட்டுமே பொதுப் பிரிவு கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெற்றிருந்தனர். மேலும் கடந்த ஆண்டு 1 லட்சத்து 2,510 இடங்கள் நிரம்பவில்லை.
37 கல்லூரிகளில் மட்டும் 100 சதவீதம்: நிகழாண்டில் 37 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. இதிலும் பெரும்பாலானவை அரசுக் கல்லூரிகளாகும். மற்றவை பல்கலைக்கழகத் துறைகளும், ஒரு சில தனியார் பொறியியல் கல்லூரிகளுமாகும். மேலும், 110 கல்லூரிகளில் 30 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பதும் அண்ணா பல்கலைக்கழக புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் (ஏஐசிடிஇ) புதிய விதிகளின்படி, இந்த 110 கல்லூரிகளிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கையில் இதே நிலை நீடித்தால், இந்தக் கல்லூரிகள் அனைத்தையும் மூடிவிட அறிவுறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயந்திரவியல் பிரிவில் 19 ஆயிரம் பேர்: துறைகளைப் பொருத்தவரை பி.இ. இயந்திரவியல் பிரிவில் 19,601 பேர் (மொத்த இடங்கள் 38,353) சேர்ந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மின்னணுவியல் தொடர்பியல் பிரிவில் 16,060 பேரும் (33,900), பி.இ. கணினி அறிவியல் பிரிவில் 14,769 பேரும் (27,715), பி.இ. கட்டடவியல் பிரிவில் 8,199 பேரும் (25,257) சேர்ந்துள்ளனர்.
தமிழ் வழிப் படிப்புகளில்... தமிழ் வழி பொறியியல் படிப்புகளைப் பொருத்தவரை மொத்தம் 659 இடங்களைக் கொண்ட பி.இ. கட்டடவியல் பிரிவில் 219 பேரும், 719 இடங்களைக் கொண்ட இயந்திரவியல் பிரிவில் 274 பேரும் சேர்க்கை பெற்றுள்ளனர்.
முதல் தலைமுறை பட்டதாரிகள்: நிகழாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளவர்களில் 55,519 பேர் மாணவர்கள், 30,836 பேர் மாணவிகள் ஆவர். இவர்களில் 45,296 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com