சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் பிஎஸ்சி வேளாண்மை படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில் முதல் 3 இடங்களை மாணவிகள் பெற்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கான கலந்தாய்வில் முதலிடம் பெற்ற மாணவி கே.ஷோபனா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கான கலந்தாய்வில் முதலிடம் பெற்ற மாணவி கே.ஷோபனா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில் முதல் 3 இடங்களை மாணவிகள் பெற்றனர்.
இந்தப் பல்கலைக்கழகம் சார்பில் பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. வேளாண்மை (சுய நிதி), பி.எஸ்சி. தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுகள் இணையதளம் மூலம் கடந்த மே மாதம் 8 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.
பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு 13,754 விண்ணப்பங்களும், பி.எஸ்சி. வேளாண்மை (சுய நிதி) படிப்புக்கு 2,082 விண்ணப்பங்களும், பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புக்கு 1,102 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 322 வேளாண்மை விண்ணப்பங்களும், 52 வேளாண்மை (சுய நிதி), 14 தோட்டக்கலை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. மேற்கண்ட படிப்புகளுக்கு 'சமவாய்ப்பு' எண்கள் Random Number 7.7.2017 அன்றும், தரவரிசைப் பட்டியல் 16.7.2017 அன்றும் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் திங்கள்கிழமை தொடங்கியது. இதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 43 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 23 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 7 மாணவர்கள் தகுதி பெற்று சேர்க்கைக்கான அனுமதி கடிதத்தை பெற்றனர். பொது இடங்களில் 336 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். இதில் 83 பேர் பங்கேற்றனர். தகுதியான 83 மாணவர்களில் முதலிடத்தை பெற்ற சீர்காழி ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த மாணவி கே.ஷோபனாவுக்கு (198.75) சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் அனுமதி சேர்க்கை ஆணையை வழங்கினார். இரண்டாம் இடத்தைப் பெற்ற சேலம் பெட்டுக்காடு மாணவி என்.கீர்த்தனாவுக்கு (197.75) பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் அனுமதி கடிதத்தை வழங்கினார். மூன்றாம் இடத்தைப் பெற்ற ஆத்தூர் பெரியேரி மாணவி வி.நிவேதாவுக்கு (197.50) காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ நாக.முருகுமாறன் அனுமதி கடிதத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் வி.திருவள்ளுவன், எம்.உமாமகேஸ்வரன், பதிவாளர் கே.ஆறுமுகம், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ராமசந்திரசேகரன், தொலைநிலைக் கல்வி மைய இயக்குநர் எம்.அருள், கல்வி திட்ட இயக்குநர் மணிவண்ணன், மாணவர் சேர்க்கை ஆலோசகர் டி.ராம்குமார், மக்கள்-தொடர்பு அலுவலக மேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரின் வசதிக்காக பல்கலைக்கழகம் சார்பில் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்தும், எதிர் மார்க்கத்திலும் கட்டணமில்லா பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது. பி.எஸ்சி. வேளாண்மை (சுய நிதி) படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 26, 27-ஆம் தேதிகளிலும், பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புக்கான கலந்தாய்வு 28-ஆம் தேதியும் நடைபெறுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புக்கு ஜூலை 29,30-இல் கலந்தாய்வு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் (பி.இ) படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 29,30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது என பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்தார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் 2017-18-ஆம் கல்வி ஆண்டில் பி.இ. படிப்புக்கு மொத்தம் 1,020 இடங்களுக்கு அனுமதி சேர்க்கை நடைபெறும். இதற்காக மொத்தம் 1,655 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில் பி.இ. படிப்புக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் ஜூலை 29,30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்கள், மேல்நிலை அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு 3% சதவீத இடங்கள் தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும்.
கலந்தாய்வுக்கான அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் மாணவர்களுக்கு தனியாக கலந்தாய்வு கடிதம் அனுப்பப்பட மாட்டாது. குறுந்தகவல் மூலமாக தகவல் அனுப்பப்படும்.
கூடுதல் தகவல்களுக்கும் பல்கலைக்கழக இணையதள முகவரியை (www.annamalaiuniversity.ac.in)  பார்க்கவும்.
மேலும், auadmission2017@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும், உதவி மைய தொலைபேசி எண்களிலும் (04144-238348 மற்றும் 238349) தொடர்புகொள்ளலாம் என பதிவாளர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com