தமிழ் வழி பி.இ. படிப்பில் சேர்ந்திருக்கும் 'டாப்' ரேங்க் மாணவர்கள்: எட்டாக்கனியாகும் வேலைவாய்ப்பு!

தமிழ் வழி பொறியியல் படிப்பை தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் மாணவர்கள் தேர்வு செய்திருக்கின்றனர்.

தமிழ் வழி பொறியியல் படிப்பை தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் மாணவர்கள் தேர்வு செய்திருக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஒரே ஆசையில், கிண்டி பொறியியல் கல்லூரியில் நேரடி பி.இ. படிப்பில் இடம் கிடைக்காத அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், இதுபோல ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வழி பி.இ. படிப்பைத் தேர்வு செய்து வருகின்றனர்.
பி.இ. இயந்திரவியல், பி.இ. கட்டடவியல் (சிவில்) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மட்டும் இந்த தமிழ் வழி பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 17 உறுப்புக் கல்லூரிகளில் மட்டும் இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மொத்தமாக தமிழ் வழி பி.இ. இயந்திரவியல் பிரிவில் 719 இடங்களும், தமிழ் வழி பி.இ. கட்டடவியல் பிரிவில் 659 இடங்களும் உள்ளன. இந்த இரு பிரிவுகளிலும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 300-க்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்களில் பாதிபேர் பிளஸ்-2 வரை ஆங்கில வழியில் படித்தவர்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, இந்தப் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். மற்றவர்கள், பிளஸ்-2 வரை தமிழ் வழியில் படித்து, நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற கனவுகளுடன் இந்த தமிழ் வழிப் படிப்புகளில் சேருகின்றனர்.
'டாப் ரேங்க்' மாணவர்கள்: இதுபோல, நிகழாண்டிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த தமிழ் வழி பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்திருக்கின்றனர்.
பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே இரண்டு பேர் தமிழ் வழி பி.இ. கட்டடவியல் துறையையும், ஒரு மாணவர் தமிழ் வழி பி.இ. இயந்திரவியல் பிரிவையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதில் பி.இ. கட்டடவியல் பிரிவைத் தேர்வு செய்த தருமபுரியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ கூறியது: ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆங்கில வழியில்தான் படித்தேன். பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1171 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால், பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 2500 ரேங்க்தான் கிடைத்தது. இதனால், கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இருந்தபோதும் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. இடம் கிடைத்தது.
ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, தமிழ் வழி பி.இ. (கட்டடவியல்) பிரிவைத் தேர்வு செய்திருக்கிறேன். பொறியியல் பாடங்களை ஆங்கிலத்திலும் படித்துக்கொள்ளலாம், தேர்வையும் தமிழ், ஆங்கிலம் கலந்து எழுதிக்கொள்ள அனுமதிப்பதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.
எனவே, தமிழ் வழி பி.இ. படிப்பதில் சிரமம் இருக்காது என்றார். இவருடைய தந்தை கோவிந்தராஜ் தருமபுரியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இதுபோல, மதுரையை அடுத்த திருபுவனத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற மாணவர் தமிழ் வழி பி.இ. இயந்திரவியல் பிரிவைத் தேர்வு செய்துள்ளார். பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1171 மதிப்பெண் பெற்ற இவர், பொறியியல் தரவரிசையில் 1113-ஆவது ரேங்க் பெற்றுள்ளார். இவரும் பிளஸ்-2 வரை ஆங்கில வழியில் படித்தவர். இவருடைய தந்தை சாமிநாதன் அரிசிக் கடை நடத்தி வருகிறார்.
எட்டாக்கனியாகும் வேலைவாய்ப்பு: இப்படி பல்வேறு கனவுகளுடன் தமிழ் வழி பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்கின்றனர் முன்னாள் மாணவர்கள்.
கடந்த 2011-ஆம் ஆண்டு இந்த தமிழ் வழி பொறியியல் படிப்புகள் தொடங்கப்பட்டன. 2017-இல் மூன்றாவது பேட்ச் தமிழ் வழி பொறியியல் மாணவர்கள் படிப்பை முடித்து வெளிவர உள்ளனர்.
அதன்படி, இதுவரை தமிழ் வழி பொறியியல் படிப்பை முடித்து வெளி வந்தவர்களின் எண்ணிக்கை நிகழாண்டோடு சேர்த்து 2 ஆயிரத்தை எட்டியிருக்கிறது. இவர்களில் 500-க்கும் குறைவானவர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் 300-க்கும் குறைவானவர்களுக்கே பி.இ. பட்டத் தகுதிக்கான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்கின்றனர் கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த முன்னாள் மாணவர்கள்.
இவர்களில், முதல் பேட்ச்சான 2011-இல் தமிழ் வழி பி.இ. இயந்திரவியல் பிரிவை முடித்துவிட்டு, இப்போது அரசு அச்சகத்தில் மெக்கானிக்காகப் (ஐடிஐ கல்வித் தகுதி) பணியாற்றி வரும் விஜயராஜ் கூறியது: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியாளர் தேர்வின்போது 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும், பல்கலைக்கழகத்தில் படித்தால் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் இந்த தமிழ் வழி படிப்பில் சேர்ந்தோம்.
ஆனால், கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து 2015 வெளிவந்த முதல் பேட்ச் தமிழ் வழி பி.இ. இயந்திரவியல் மாணவர்கள் 60 பேரில் 5 பேருக்கு மட்டுமே அரசுப் பணி வாய்ப்பு கிடைத்தது. அண்ணா பல்கலைக்கழக வளாகத் தேர்வில் 8 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்தது. மற்றவர்களுக்கு பி.இ. தகுதிக்கான பணி வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
2016-ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்து வெளி வந்த 60 பேரில் 10 பேருக்கு மட்டும் வளாகத் தேர்வில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதே நேரம், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலிருந்து படிப்பை முடித்து ஆண்டுக்கு ஆண்டு வெளி வரும் 500-க்கும் அதிகமான தமிழ் வழி பி.இ. மாணவர்கள் நிலை இதைவிட மோசமாக உள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் ஆங்கில மொழித் திறன் இல்லாததே. நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதையே நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அதற்கான பயிற்சி அளிக்கப்படும்போதும், பிற பி.இ. மாணவர்களுடன் அமரவைத்து பொதுவான மொழித் திறன் பயிற்சியே எங்களுக்கும் அளிக்கப்படுகிறது.
இந்தநிலையை மாற்றி, பள்ளியில் பிளஸ்-2 வரை தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்களுக்கு தனியாக ஆங்கில மொழித் திறன் பயிற்சியை அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் வெற்றியடையும் என்றார்.
இதுகுறித்து கிண்டி பொறியியல் கல்லூரி டீன் கீதா கூறியதாவது: தமிழ் வழி பொறியியல் மாணவர்களின் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்த பல்கலைக்கழகம் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே மேலும் மேம்படுத்த இப்போது முடிவு செய்திருக்கிறோம் என்றார்.
வளாகத் தேர்வுக்கு அழைப்பதில்லை
பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 17 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பி.இ. படிக்கும் மாணவர்களை, பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வளாகத் தேர்வில் பங்கேற்க அழைப்பதில்லை என பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆரணி உறுப்புக் கல்லூரியில் 2015-இல் படிப்பை முடித்து வெளிவந்த பி.இ. இயந்திரவியல் (தமிழ் வழி) மாணவர் அருண்குமார் கூறியது: தமிழ் வழி பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு, நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில் உரையாட முடியாமல் போவது முக்கியக் காரணம். அதை மேம்படுத்துவது மிக அவசியம்.
அதேநேரம், வளாகத் தேர்வு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்க உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை.
இதன் காரணமாக உறுப்புக் கல்லூரிகளில் படிப்பை முடிப்பவர்களில் 80 சதவீதத்தினர் வேலைவாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com