தள்ளிப் போகிறது பி.இ. கலந்தாய்வு?

'நீட்' தேர்வு முடிவு தள்ளிப் போவதால், தமிழகத்தில் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தள்ளி வைப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஆலோசித்து

'நீட்' தேர்வு முடிவு தள்ளிப் போவதால், தமிழகத்தில் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தள்ளி வைப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
வழக்கமாக ஜூன் 27-ஆம் தேதி தொடங்கப்படும் பி.இ. கலந்தாய்வு, இந்த முறை ஜூன் 29 அல்லது ஜூன் 30 ஆம் தேதி தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் 27-இல் தொடங்கி ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னதாக முடிப்பது வழக்கம்.
மேலும், பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பெரும் பகுதியினர் மருத்துவப் படிப்புக்குச் சென்று விடுவார்கள் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கி ஓரிரு நாளுக்குப் பின்னரே பி.இ. கலந்தாய்வு தொடங்கப்படும்.
அதுபோல, நிகழாண்டிலும் பி.இ. கலந்தாய்வு ஜூன் 27-இல் தொடங்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான 'நீட்' தகுதித் தேர்வு முடிவு வெளியிடுவது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 'நீட்' தேர்வு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், தேர்வு முடிவை வெளியிட சி.பி.எஸ்.இ.-க்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், ஜூன் 26-ஆம் தேதிக்குள் அந்தத் தேர்வு முடிவை வெளியிடவேண்டும் என கடந்த ஜூன் 12-ஆம் தேதி உத்தரவிட்டது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 7 நாள்களுக்கு மேல் ஆகியும், இதுவரை 'நீட்' தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை.
தாமதமாகும் எம்.பி.பி.எஸ். சேர்க்கை: இதன் காரணமாக, எம்.பி.பி.எஸ். சேர்க்கை தொடங்குவது தள்ளிப்போகும் என்பதால், பி.இ. கலந்தாய்வு தொடங்குவதும் தள்ளிப்போகும் நிலை உருவாகியிருக்கிறது. இது தொடர்பாக, உயர் கல்வித் துறை செயலர் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில், கலந்தாய்வு தொடங்குவதை ஓரிரு நாள்களுக்கு தள்ளி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியது: 'நீட்' தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு இன்றி மேலும் தாமதமானால், பி.இ. கலந்தாய்வை ஜூன் 29 அல்லது ஜூன் 30 ஆம் தேதி தொடங்குவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com