’நீட்' தேர்விலிருந்து விலக்களிக்க கோருவது அவமானமாக இல்லையா? அரசுக்கு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி

’நீட்' தேர்விலிருந்து விலக்களிக்கக் கோருவது தமிழக மாணவர்களின் தரத்தை அரசே குறைத்து மதிப்பிடுவது அவமானமாக இல்லையா? என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி

’நீட்' தேர்விலிருந்து விலக்களிக்கக் கோருவது தமிழக மாணவர்களின் தரத்தை அரசே குறைத்து மதிப்பிடுவது அவமானமாக இல்லையா? என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் திவ்யா ஷரோனா, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் எம்.காமராஜ் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
அதன் விவரம் வருமாறு: மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவு தேர்வில் (நீட்) தேர்ச்சி பெற்றுள்ளோம். கேரள மாநிலத்தைப் போன்று, தமிழகத்தில் உள்ள தனியார், சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் தங்களிடம் உள்ள முதுநிலை படிப்புகளுக்கான 50 சதவீத இடங்களை அரசிடம் அளிப்பதில்லை.
அரசுக்கான இடங்களையும், தனியார் கல்லூரி நிர்வாகங்களே நிரப்பிக் கொள்கின்றன. இதன் காரணமாக, எங்களை போன்று ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால், தமிழக அரசுக்குரிய இடங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுக்கள், நீதிபதி என்.கிருபாகரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: ’நீட்' தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு கோருவது வருத்தத்துக்குரியது ஆகும். இந்தத் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறலாம். ஆனால், ’நீட்' எங்களுக்கு வேண்டாம் எனக்கூறுவதன் மூலம், தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை அரசே குறைத்து மதிப்பீடு செய்கிறது. இந்த நடவடிக்கை ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் அவமானகரமானதாக இல்லையா?. மற்ற மாநிலங்கள் தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதபோது, தமிழகம் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணம் என்ன?
தமிழகத்தில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், இந்த தொழில்(மருத்துவக் கல்வி) நடப்பது வேதனைக்குரியது.
எனவே, தமிழகத்தில் ஒவ்வொரு அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு எத்தனை முதுநிலை மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள், கடந்த 2016-17-ஆம் கல்வியாண்டில் எவ்வாறு பூர்த்தி செய்யப்பட்டது?
இந்த இடங்கள் மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி முறையான கல்வித்தகுதி மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பூர்த்தி செய்யப்படுகிறதா? இதை மருத்துவக் கவுன்சிலும் கண்காணிக்கிறதா? என்பது குறித்தும், வரும் கல்வியாண்டில் (2017-18) இந்த முதுநிலை மருத்துவ இடங்களை எந்த அடிப்படையில் நிரப்பப்போகிறீர்கள்? என்பது குறித்தும், இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவ, மாணவியருக்கும் தமிழக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது என்பதையும், தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு கல்லூரிகளிலும் உள்ள மருத்துவ ஆசிரிய பயிற்றுநர்கள் குறித்த புள்ளி விவரங்களையும், இந்திய மருத்துவக் கவுன்சில் பெற்றுள்ளதா? என்பது குறித்தும் விளக்க வேண்டும்.
இந்த வழக்கில் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளரையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். எனவே, அவரும் இது தொடர்பாக உரிய பதிலளிக்க வேண்டும் எனக்கூறி, விசாரணையை வரும் ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com