தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி பெற்றிருப்பது கட்டாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சி பெற்றிருப்பதைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சி பெற்றிருப்பதைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கல்வி கற்பதைக் கட்டாயமாக்கும் வகையில், அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் 23 (2)-ஆவது பிரிவின்படி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டுகள் கட்டாயப் பயிற்சி நிறைவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அதாவது, 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்தப் பயிற்சியை நிறைவு செய்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், நாடு முழுவதும் உள்ள 66.41 லட்சம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களில் 11 லட்சம் பேர் மட்டுமே இந்தப் பயிற்சியை நிறைவு செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இந்தக் கற்பித்தல் பயிற்சியை நிறைவு செய்வதற்கான கால அவகாசத்தை 2019-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இந்தப் பயிற்சியை முடித்தவர்கள் மட்டுமே தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக தொடரும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு வரைவுத் திட்டத்தை உருவாக்கியது.
இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நபார்டு முதலீட்டு நிதியை அதிகரிக்க ஒப்புதல்: விவசாயக் கடன்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நபார்டு வங்கியின் முதலீட்டை ரூ.30 ஆயிரம் கோடியாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்ததுக்கு பின்னேற்பு அனுமதி: இணையவழிக் குற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய கணினி அவசரகாலக் குழுவுக்கும், அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை பின்னேற்பு அனுமதி வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com