'அரசு பள்ளி ஏழை மாணவர்களுக்கு இலவச பொறியியல் கல்வி'

அதிக மதிப்பெண் பெற்று, பொறியியல் கல்வி பயில ஆர்வமுடன் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வியுடன், உணவு, இருப்பிடம் வழங்கி ஊக்குவிக்கத் தயாராக உள்ளோம் என்று தனலட்சுமி பொறியியல்

அதிக மதிப்பெண் பெற்று, பொறியியல் கல்வி பயில ஆர்வமுடன் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வியுடன், உணவு, இருப்பிடம் வழங்கி ஊக்குவிக்கத் தயாராக உள்ளோம் என்று தனலட்சுமி பொறியியல் கல்லூரி நிறுவனர் வி.பி.ராமமூர்த்தி கூறினார்.
தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிநிறைவு மற்றும் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் வி.பி.ராமமூர்த்தி மேலும் பேசியதாவது:
மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். அந்தப் பள்ளி ஆசிரியர்களின் அயராத கடும் உழைப்பும், முயற்சியும் பாராட்டத்தக்கது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை மாணவர்களில், அதிக மதிப்பெண் பெற்று, பொறியியல் கல்வி பயில விரும்பும் மாணவர்களைத் தேர்வு செய்து அனுப்பினால் அவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க தயாராக உள்ளோம் என்றார் அவர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.இளங்கோ பேசும்போது,
'பள்ளிகளில் பாடங்களை மனப்பாடம் செய்து தேர்ச்சி பெற வைக்கும் பயிற்சி முறையை அளிப்பதால், பொறியியல் கல்லூரிகளில் வந்து சேரும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
குறைந்தபட்சம் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களையாவது நன்கு கற்றுக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்' என்றார்.
விழாவில் பணி நிறைவு பெற்ற 8 மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களும், பதவி உயர்வு பெற்ற 14 தலைமை ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com