500-க்கு 486 மதிப்பெண் எடுத்துள்ள மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி

வீட்டு வேலையிலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அபிராமி  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண் பெற்றுள்ளார்.
500-க்கு 486 மதிப்பெண் எடுத்துள்ள மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி

வீட்டு வேலையிலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அபிராமி  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இவரைப் போல் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி மாணவர்கள் 71 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
குடும்பச் சூழல் காரணமாக, பள்ளிக்குச் சென்று பயிலும் வாய்ப்பை இழந்த சிறார்களை மீட்டு, மீண்டும் பள்ளிக்கு அனுப்பி சாதிக்க உதவும் சிறந்த பணியை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு மீட்கப்படும் குழந்தைகள், முதலில் குழந்தைத் தொழிலாளர் நலப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னர், முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 324 தேசிய குழந்தைத் தொழிலாளர் நலப் பள்ளிகளில் 8,156 குழந்தைத் தொழிலாளர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 277 பேர் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்று, 245 பேர் தேர்ச்சி பெற்றனர். மூன்று பேர் 1,200-க்கு 1,100 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருந்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு: அதேபோல், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை 360 மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் எழுதினர். இதில் 333 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 71 மாணவர்கள் 500-க்கு 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீட்டு வேலையிலிருந்து 2012-ஆம் ஆண்டு மீட்கப்பட்ட அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வி.அபிராமி 500-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் மாணவர்களிலேயே அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இவருக்கு அடுத்தப்படியாக, தருமபுரி மாவட்டத்தில் கல் உடைக்கும் தொழிலிலிருந்து 2012 -இல் மீட்கப்பட்ட மாணவி லோகேஸ்வரி 500-க்கு 476 மதிப்பெண்களையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செங்கல் சூளையிலிருந்து மீட்கப்பட்ட மாணவர் எம்.விஸ்வநாதன் 500-க்கு 474 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவி அபிராமி கூறுகையில், 'வேளாண் துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்வதே எனது லட்சியம்.
எனவே, பிளஸ் 1 வகுப்பில் கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் பாடப் பிரிவை எடுத்துப் படிக்கத் திட்டமிட்டுள்ளேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com