'சிறப்புப் பயிற்சிகளால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விருதுநகர் மீண்டும் முதலிடம்'

பத்தாம் வகுப்பில் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், சிறப்புப் பயிற்சி அளித்ததே அரசு பொதுத் தேர்வில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் மீண்டும் முதலிடம் பெற

பத்தாம் வகுப்பில் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், சிறப்புப் பயிற்சி அளித்ததே அரசு பொதுத் தேர்வில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் மீண்டும் முதலிடம் பெற காரணமாக அமைந்தது என முதன்மைக் கல்வி அலுவலர் மனோகரன் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் விருதுநகர் மாவட்டம் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தொடர்ந்து 26 ஆண்டுகள் முதலிடம் பெற்று வந்தது. ஆனால், 2012 இல் 3 ஆம் இடத்திற்கும், 2013 இல் 5 ஆம் இடம், 2014 இல் 4 ஆம் இடம், 2015 இல் 2 ஆம் இடம், 2016 இல் 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்தநிலையில், 2017-இல் விருதுநகர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 19 மாணவர்கள், 14 ஆயிரத்து 555 மாணவிகள் உட்பட மொத்தம் 28 ஆயிரத்து 574 பேர் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதினர். அதில், மாணவர்கள் 13 ஆயிரத்து 731 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 429 பேர் உட்பட மொத்தம் 28 ஆயிரத்து 160 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில் 97.95 சதவீதம் பேரும், மாணவிகளில் 99.13 சதவீதம் பேர் என 98.55 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மெல்ல கற்கும் மாணக்கர்களுக்கு முந்தைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, சிறந்த ஆசிரியர்களை கொண்டு தொடர்ந்து சிறப்பு பயிற்சி அளித்ததே காரணம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த வாரம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. இதனால், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த வெற்றி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் கூறியதாவது: கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகள், விடுமுறை நாள்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக விருதுநகர் மாவட்டம், மாநில முதலிடம் பெற்றுள்ளது.
இதற்கு காரணமான மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு முதல் மாணவ, மாணவிகளை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் பயிற்சியளிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com