பத்தாம் வகுப்புத் தேர்வில் 94.4 % தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியவர்களில் 94.4 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவையிலுள்ள பள்ளியொன்றில் 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை செல்லிடப்பேசியில் பார்த்த மகிழ்ச்சியில் மாணவிகள்.
கோவையிலுள்ள பள்ளியொன்றில் 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை செல்லிடப்பேசியில் பார்த்த மகிழ்ச்சியில் மாணவிகள்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியவர்களில் 94.4 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வெழுதிய மாணவியரில் 96.2 சதவீதம் பேரும் மாணவர்களில் 92.5 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு (2016) 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம் ஆகும். அதாவது, 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 19) வெளியிட்டார்.
தேர்வு எழுதிய மாணவர்கள்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை இந்த ஆண்டு மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரத்து 909 மாணவர்கள் எழுதினர்.
பள்ளிகள் மூலமாகத் தேர்வு எழுதிய 9 லட்சத்து 82,097 பேரில் மாணவர்கள் 4 லட்சத்து 90,870 பேர், மாணவிகள் 4 லட்சத்து 91,226 பேர். இதில் 9 லட்சத்து 26,711 பேர் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் சாதனை: இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 3.7 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டுடன் (95.9 சதவீதம்) ஒப்பிடும்போது 0.3 சதவீதம் அதிகம் ஆகும்.
மீண்டும் விருதுநகர் முதலிடம்: பிளஸ் 2வைப் போல பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் மாவட்ட அளவில் 98.55 சதவீத தேர்ச்சியைப் பெற்று விருதுநகர் முதலிடத்தையும், 88.74 சதவீதத் தேர்ச்சியுடன் கடலூர் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.
1,557 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம்: பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 12,188 பள்ளிகளில் மொத்தம் 5,463 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன. அவற்றில் 1,557 அரசு பள்ளிகளும் அடங்கும்.
சமூக அறிவியலில் 61,115 பேர் 100-க்கு 100: நிகழாண்டு மொழிப்பாடத்தில் 69 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர். கணிதத்தில் 13,759, அறிவியலில் 17,481, சமூக அறிவியலில் 61,115 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை.
481-க்கு மேல் 38,613 பேர்: தேர்வெழுதியவர்களில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 38,613 பேரும், 451 முதல் 480 வரை 1,22,757 பேரும், 426 முதல் 450 மதிப்பெண் வரை 1,13,831 பேரும் பெற்றுள்ளனர்.
மே 25 முதல்...: பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 25-ஆம் தேதி முதல் தாங்களே இணையதளத்தில் (www.dge.tn.nic.in)  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுதிய பள்ளிகளிலும் பெறலாம்.
மறுகூட்டலுக்கு... பள்ளி மூலம் தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை (மே 22) மாலை 5.30 மணி வரை தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், தேர்வெழுத வராதோருக்கும் துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com