முதுநிலை மருத்துவப் படிப்பு: ஓரிடத்தை நிரப்ப இடைக்கால தடை

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியருக்கான இடஒதுக்கீடு பிரிவில் ஓர் இடத்தை நிரப்பாமல் ஒதுக்கி வைக்க, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுக் குழுவுக்கு

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியருக்கான இடஒதுக்கீடு பிரிவில் ஓர் இடத்தை நிரப்பாமல் ஒதுக்கி வைக்க, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.ஸ்வேதா தாக்கல் செய்த மனு:
கடந்த 2015 -ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன். பின்னர், திருமணம் முடிந்து கணவருடன் அபுதாபியில் வசித்து வருகிறேன். அங்கு 182 நாள்களுக்கு மேலாக வசித்ததால், வெளிநாடு வாழ் இந்தியர் அந்தஸ்து கிடைக்கப் பெற்றேன்.
இந்த நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வில் 684.43 மதிப்பெண் பெற்றுள்ளேன். இதையடுத்து, வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்தேன். கடந்த மே 15 -ஆம் தேதி தேர்வு குழு வெளியிட்ட முதல் தெரிவு பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை.
அதிக மதிப்பெண் பெற்ற எனக்கு கலந்தாய்வில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே, முதுநிலை மருத்துவப் படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை பட்டியலை ரத்து செய்து, புதிதாக தரவரிசை பட்டியல் வெளியிட்டு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், மனுதாரர் அனைத்து சான்றிதழ்களையும் தேர்வு குழுவிடம் மே 23 -க்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றை தேர்வு குழு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.
பரிசீலனையில் திருப்தியடையவில்லை எனில், அதுபற்றி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, அதுவரை வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டில் ஓர் இடத்தை நிரப்பாமல் ஒதுக்கி வைக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை ஜூன் 2 -ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com