முதுநிலை பல் மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

குளறுபடி காரணமாக, முதுநிலை பல் மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது

குளறுபடி காரணமாக, முதுநிலை பல் மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பல் மருத்துவ இடங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான பல் மருத்துவ இடங்கள் ஆகியவற்றுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சுமார் 650 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் உள்ள திரையில் அனைத்து இடங்களும் காட்டப்படவில்லை எனக் கூறி கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அவர்கள் தேர்வுக் குழு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கலந்தாய்வு ஒத்திவைப்பு: இதையடுத்து முதுநிலை பல் மருத்துவத்துக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜு கூறியது:
கலந்தாய்வு நடைபெறுவதற்கு முன்பு இணையதளத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 254 இடங்கள் உள்ளன என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இங்கு 109 இடங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. பெரும்பாலும் முக்கியப் பாடப்பிரிவுகளும், மருத்துவச் சிகிச்சை (ஸ்ரீப்ண்ய்ண்ஸ்ரீஹப்) சார்ந்த இடங்களும் மறைக்கப்பட்டுள்ளன.
மேலும், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீட் தேர்வின்படி தரவரிசையில் முன்னிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றார்.
தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது:
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறுபான்மை அல்லாத கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒப்படைக்க வேண்டும். ஆனால், அந்தக் கல்லூரிகள் தாங்கள் விருப்பப்பட்ட இடங்களை மட்டுமே அரசுக்கு ஒப்படைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்வுக் குழுவிடம் மொத்தம் 109 இடங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டன. இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி 30 சதவீதம் வரை வழங்கப்பட்ட போனஸ் மதிப்பெண் அடிப்படையில் அரசு மருத்துவர்கள் தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளனர். அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com