ஆயுர்வேதம், ஹோமியோபதியில் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்க வலியுறுத்தல்

தமிழக அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் ஆயுர்வேதம், ஹோமியோபதி முதுநிலை மருத்துவப் படிப்புகளை தொடங்க ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய ஹோமியோபதி கவுன்சில் தலைவர் டாக்டர் ராம்ஜிசிங்

தமிழக அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் ஆயுர்வேதம், ஹோமியோபதி முதுநிலை மருத்துவப் படிப்புகளை தொடங்க ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய ஹோமியோபதி கவுன்சில் தலைவர் டாக்டர் ராம்ஜிசிங் வலியுறுத்தினார்.
மேற்கு தாம்பரம் சாய்ராம் ஆயுர்வேதம்-சித்த மருத்துவம்-ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளின்
11-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 140 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி டாக்டர் ராம்ஜி சிங் மேலும் பேசியது:
தமிழகத்தில் ஆயுர்வேத, ஹோமியோபதி இளநிலை மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்த மாணவர்கள் முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. எனவே முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமான பாடத் திட்டங்கள்: பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி புத்துணர்வு பெற்றுள்ள ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹோமியோபதி மத்தியக் கவுன்சில் மூலம் நாடு முழுவதும் ஹோமியோபதி இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்குத் தரமான பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவிலான மருத்துவக் கல்வியை மாணவர்கள் பெறுவதற்கான ஆய்வு நடவடிக்கைகளை மத்திய ஹோமியோபதி கவுன்சிலின் கல்வி மேம்பாட்டுக் குழு மேற்கொண்டுள்ளது என்றார் டாக்டர் ராம்ஜி சிங்.
உலகம் போற்றும் ஆயுர்வேதம்: இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ முறை மத்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் வனிதா ஆர். முரளிகுமார் பேசுகையில், '' இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள 166 ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் அமெரிக்கா,ரஷியா,ஆஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான அலோபதி மருத்துவர்கள் படித்து வருகின்றனர். எனவே, சர்வதேச மருத்துவ சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள ஆயுர்வேத மருத்துவத் துறையில் மாணவர்கள் தங்களது அறிவாற்றலை மேம்படுத்தி ஆராய்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார் டாக்டர் வனிதா ஆர்.முரளிக்குமார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினர் மிர்துள் குமார் சஹானி, சாய்ராம் கல்விக் குழுமங்களின் தலைமைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, பொருளாளர் ஷர்மிளா ராஜா, தாளாளர் ஆர்.சதீஷ்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பி.சேரமன்னன், மதுக்குமார், ராமகிருஷ்ணாச்சார்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com