தொலைநிலைப் பட்டப் படிப்புகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை: சென்னைப் பல்கலை.யில் அடுத்த ஆண்டு முதல் அமல்

சென்னைப் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளிலும் வரும் 2018-ஆம் ஆண்டு முதல் விருப்பப் பாடத் தேர்வு முறை

சென்னைப் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளிலும் வரும் 2018-ஆம் ஆண்டு முதல் விருப்பப் பாடத் தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.---'சாய்ஸ் பேஸ்ட் கிரெடிட் சிஸ்டம்') அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அது மட்டுமின்றி, முறையான பட்டப் படிப்புகளுக்கு நடத்தப்படுவதுபோல, தொலைநிலைப் பட்டப் படிப்புக்கும் பருவத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
மாறி வரும் காலச் சூழல், தொழில் நிறுவனங்களின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தைத் தாங்களாகவே தேர்வு செய்து கொள்ள வசதி செய்வதுதான் விருப்பப் பாடத் தேர்வு முறை.
ஒரு படிப்பின் அடிப்படைப் பாடங்களில் அல்லாமல், துணைப் பாடங்களில் தாங்கள் விரும்பும் வேறு துறை பாடத்தை மாணவர்கள் மாற்றித் தேர்வு செய்து படிக்க இந்த நடைமுறை வசதி செய்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலின் பேரில் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகத் துறைகளில் 2015-16 கல்வியாண்டு முதலும், இணைப்புக் கல்லூரிகளில் 2017-18 கல்வியாண்டு முதலும் இந்த நடைமுறையை அறிமுகம் செய்தது.
தொலைநிலைக் கல்வியில் முதன் முறை: இந்நிலையில், தொலைநிலை பட்டப் படிப்புகளில் முதன் முறையாக சி.பி.சி.எஸ். முறையை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது.
இது குறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது: 
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் அனைத்துப் பட்டப் படிப்புகளிலும் 2018-19-ஆம் கல்வியாண்டு முதல் சி.பி.சி.எஸ். முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதோடு பருவத் தேர்வு முறையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் காரணமாக முறையான பட்டப் படிப்புப் படிக்கும் மாணவர்களைப் போல, தொலைநிலைக் கல்வி மாணவர்களும் 6 மாதத்துக்கு ஒறு முறை பருவத் தேர்வை எழுத வேண்டும். 
இதற்கான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2018 பிப்ரவரி மாதத்துக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டுவிடும் என்றார்.
அனைத்துப் பல்கலைக்கழக த்தொலைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் விரைவில் சி.பி.சி.எஸ். முறை அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com