பிரிக்ஸ் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல்: அண்ணா பல்கலை.க்கு 85-ஆம் இடம்

பிரபல கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள பிரிக்ஸ் நாடுகள் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 85-ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
பிரிக்ஸ் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல்: அண்ணா பல்கலை.க்கு 85-ஆம் இடம்

பிரபல கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள பிரிக்ஸ் நாடுகள் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 85-ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னைப் பல்கலைக்கழகம் 171-180 வரையிலான இடத்தைப் பிடித்துள்ளது.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான அறிவுசார் சொத்துரிமை, ஆராய்ச்சி ஊக்குவிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து, தரவரிசைப் பட்டியலை கியூ.எஸ். நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 2018-ஆம் ஆண்டுக்கான உலக அளவிலான பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. இதில் முதல் 200 இடங்களில் தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி, பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி. ஆகிய 3 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியிருந்தன.
இப்போது ஆசியா, அமெரிக்கா என பகுதி வாரியான பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் மும்பை ஐஐடி 34-ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 41-ஆவது இடத்தையும், சென்னை ஐஐடி 48-ஆவது இடத்தையும் பிடித்து அசத்தின. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 301-350 வரையிலான இடம் கிடைத்தது.
பிரிக்ஸ் நாடுகள் அளவில்...: இப்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் நாடுகள் அளவிலான சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலை கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதல் நான்கு இடங்களை...இதில் முதல் நான்கு இடங்களையும் சீன கல்வி நிறுவனங்கள் பிடித்துள்ளன. ஸிங்குவா பல்கலைக்கழகம், பெக்கிங் பல்கலைக்கழகம், ஃபுடான் பல்கலைக்கழகம், சீன அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகிய 4 சீன பல்கலைக்கழகங்கள் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன.
இதில் மும்பை ஐஐடி 9-ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி 10-ஆவது இடமும், தில்லி ஐஐடி 17-ஆவது இடமும், சென்னை ஐஐடி 18-ஆவது இடமும், கான்பூர் ஐஐடி 21-ஆவது இடமும், காரக்பூர் ஐஐடி 24-ஆவது இடமும், தில்லி பல்கலைக்கழகம் 41-ஆவது இடமும் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 85-ஆவது இடம் பிடித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் 171 முதல் 180 வரையிலான இடம் பிடித்துள்ளது.
மாணவர் வேலைவாய்ப்பில்...இது போன்று மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் திறன் அடிப்படையிலான உலக அளவிலான பல்கலைக்கழகத் தர வரிசைப் பட்டியலையும் கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி இரண்டும் 191 முதல் 200 வரையிலான இடத்தைப் பிடித்துள்ளன. சென்னை ஐஐடி, தில்லி பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் ஆகியவை 201 முதல் 250 வரையிலான இடத்தைப் பிடித்துள்ளன. ஐஐடி காரக்பூர் 251 முதல் 300 வரையிலான ரேங்க் பெற்றுள்ளது. பெங்களூர் ஐஐஎஸ்சி, கான்பூர் ஐஐடி இரண்டும் 301 முதல் 500 வரையிலான இடத்தை மட்டுமே பிடித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com