இந்தியமுறை படிப்புகளுக்கு அக்.11-இல் கலந்தாய்வு

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அக்.11-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்தியமுறை படிப்புகளுக்கு அக்.11-இல் கலந்தாய்வு

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அக்.11-ஆம் தேதி தொடங்க உள்ளது.
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆக. 2-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 6,938 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தப் படிப்புகளுக்கு 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 396 இடங்களும், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 859 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.
இந்தப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு அக். 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியானவர்களுக்கு தனித்தனியே குறுஞ்செய்தி மற்றும் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். 
குறுந்தகவலோ அழைப்புக்கடிதமோ கிடைக்கப்பெறாதவர்கள்,  www.tnhealth.org  என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்தில் உள்ள இணைப்பில் விண்ணப்பப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு அக். 6-ஆம் தேதி காலை 11 மணி முதல் அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களுக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு உரிய கலந்தாய்வு நாளில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் அல்லது தற்சமயம் படித்து வரும் கல்லூரியில் இருந்து பெற்ற ஆளறிச் சான்றிதழுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
வரைவோலை: மேலும்  Director of Indian Medicine and Homoeopathy,  Chennai-106என்ற பெயருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து அக். 3 அல்லது அதற்குப் பின்னரோ சென்னையில் மாற்றத்தக்க வகையில், கல்விக் கட்டணமாக ரூ.5 ஆயிரம், கலந்தாய்வுக் கட்டணமாக ரூ.500 என இரண்டு வரைவோலைகள் எடுத்து வர வேண்டும். 
கலந்தாய்வு ஒவ்வொரு நாளும் காலை 9 மணி மற்றும் பிற்பகல் 2 மணி என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு சுகாதாரத் துறை இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com