கல்லூரிக்கு வராமலே வருகைப் பதிவு: விதிமீறலை ஊக்குவிக்கும் பல்கலைக்கழகம்

கல்லூரிகளுக்கு வராமலே மாணவர்களுக்கு வருகைப் பதிவை (அட்டென்டன்ஸ்) வழங்கும் வகையில், தவறான நடைமுறையை அண்ணாப் பல்கலைக்கழகமே ஊக்குவிப்பதாக பொறியியல்

கல்லூரிகளுக்கு வராமலே மாணவர்களுக்கு வருகைப் பதிவை (அட்டென்டன்ஸ்) வழங்கும் வகையில், தவறான நடைமுறையை அண்ணாப் பல்கலைக்கழகமே ஊக்குவிப்பதாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) விதிகளின்படி, 8 பருவங்களை (செமஸ்டர்) கொண்ட பி.இ. படிப்புகளில் ஒவ்வொரு பருவமும் 90 நாள்கள் அல்லது 450 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இந்த வகுப்புகள் முடிந்தவுடன் பருவத் தேர்வுகள் நடத்தப்படும். 
அவ்வாறு ஒவ்வொரு பருவத் தேர்வும் நடத்தப்படுவதற்கு முன்னதாக, மாணவர்களின் கல்லூரி வருகை விவரம், உள்மதிப்பீட்டுத் தேர்வு (இன்டர்னல்) மதிப்பெண் விவரங்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பொறியியல் கல்லூரிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பதிவேற்றத்தை குறிப்பிட்ட நாள்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
அதுபோல், இந்த ஆண்டு 3, 5, 7 -ஆம் பருவ வகுப்புகள் (வேலை நாள்) அக்டோபர் 21 -ஆம் தேதி முடிவடைகிறது. செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 23 -ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன. ஆனால், மாணவர் வருகை குறித்த விவரங்களை சமர்பிப்பதற்கான இணையதள பகுதி அக்டோபர் 17 -ஆம் தேதி திறக்கப்பட்டு அக்டோபர் 20 -ஆம் தேதியே மூடபட்டுவிடும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அக்டோபர் 21 -ஆம் தேதி வரையிலான மாணவர் வருகையை, முன்கூட்டியே அக்டோபர் 20 -ஆம் தேதியே பதிவேற்றம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் பேராசிரியர்கள்.
இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கூறியது:இந்த நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இம்முறை ஒரு நாள் முன்கூட்டி விவரங்களைச் சமர்ப்பிக்கிறோம். இதற்கு முன்னர் 4 முதல் 5 நாள்களுக்கு முன்கூட்டியே, மாணவர் வருகையை பதிவேற்றம் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழகம் தொடர்ந்து இதுபோன்ற நடைமுறையைக் கடைப்பிடிப்பது தவறாகும். இதைப் பயன்படுத்தி, பல கல்லூரிகள், பல நாள்கள் கல்லூரிக்கு வராத மாணவர்களுக்கும் முழு வருகைப் பதிவை அளித்து வருகின்றன. இதனால், மாணவர்களும் கல்லூரிக்கு முறையாக வருவதில்லை. பொறியியல் கல்லூரியின் தரம் குறைவதற்கு இதுவும் முக்கியக் காரணம் என்றனர் அவர்கள்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா கூறியது:
பருவ(செமஸ்டர்) வேலை நாள்கள் முடிவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, மாணவர் வருகை விவரங்களை கல்லூரிகள் சமர்பிக்கக் கோரும் நடைமுறையை பல ஆண்டுகளாக பல்கலைக்கழகம் கடைப்பிடித்து வருகிறது. மாணவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டு தயார் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இவ்வாறு முன்கூட்டியே விவரங்களை பெற வேண்டியிருக்கிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com