சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள்: மத்திய அரசு, சி.பி.எஸ்.இ. நிர்வாகம் பரிசீலிக்க உத்தரவு

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி தயாரித்த பாடப் புத்தகங்களைப் பின்பற்ற வேண்டி, தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு, சிபிஎஸ்இ நிர்வாகம் 4 வாரங்களுக்குள்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி தயாரித்த பாடப் புத்தகங்களைப் பின்பற்ற வேண்டி, தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு, சிபிஎஸ்இ நிர்வாகம் 4 வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்:
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பிலேயே எட்டு பாடங்களைப் பயிற்றுவிக்கின்றன. ஆனால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பள்ளிகளில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) விதிப்படி தயாரிக்கப்பட்ட புத்தகங்களே பயன்படுத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளில், பள்ளி நிர்வாகம் கொடுக்கும் புத்தகங்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. 
ஒன்றாம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் பொதிமூட்டை போல புத்தகங்களைச் சுமந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு அதிக பாடங்களைத் திணிக்கக்கூடாது. எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் விதிப்படி தயாரிக்கப்பட்ட புத்தகங்களை வழங்கி அதை கற்றுக்கொடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இம்மனு வெள்ளிக்கிழமை, நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று வயதிலேயே குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைத்து ,அவர்களின் குழந்தைப் பருவத்தையே வீணடிக்கின்றனர். 
துள்ளிக் குதித்து விளையாட வேண்டிய குழந்தைகளின் முதுகில் பொதி மூட்டை போல புத்தகங்களை சுமக்க விடுவது அநியாயம்' என்றார். 
பின்னர், மனுதாரரின் கோரிக்கையை மத்திய அரசும், சி.பி.எஸ்.இ. நிர்வாகமும் 4 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com