அரசுப் பள்ளிகளில் முடங்கி கிடக்கும் ஸ்மார்ட் வகுப்புகள்: கல்வித் துறை நடவடிக்கை எடுக்குமா?

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முடங்கியுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வர கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் முடங்கி கிடக்கும் ஸ்மார்ட் வகுப்புகள்: கல்வித் துறை நடவடிக்கை எடுக்குமா?

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முடங்கியுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வர கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் புரொஜெக்டர் மூலம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நவீன தொழில்நுட்பத்தில் படக் காட்சிகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களின் மனதில் பாடங்கள் எளிதாக பதிவாகும். அதனால் இத்தகைய முறை தனியார் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. 

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடம் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு அரசால் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஓஎச்பி புரொஜெக்டர், மடிக்கணினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாட வகுப்புகள் தொடர்பான குறுந்தகடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு படக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆர்வம், முயற்சியின் காரணமாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்துவதற்கான நவீன தொழில்நுட்ப கருவிகள் இருந்த போதிலும் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படாமல் அவை முடங்கிப்போயுள்ளன. 

அவ்வாறு முடங்கி போயுள்ளதற்கு காரணம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் ஆர்வம் இல்லாததே ஆகும். அதனால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நவீன தொழில் நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படாமல் முடங்கிப் போயுள்ளன.

ஸ்மார்ட் வகுப்புகள் நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் கூட சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நவீன தொழில்நுட்ப முறையிலான கல்வி கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளைத் தொடங்க தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. 

ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்புகளே சில பள்ளிகளைத் தவிர பெரும்பாலான பள்ளிகளில் சரிவர நடத்தப்படாமல் முடங்கிப்போயுள்ளது.

புதிதாக 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்புகளும், புதிதாக தொடங்கப்பட உள்ள ஸ்மார்ட் வகுப்புகளும் சரிவர நடத்தப்படுகிறதா என கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

அதனால் கல்வித் துறை உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படாத பள்ளிகளில் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஸ்மார்ட் வகுப்புகள் சரிவர நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஸ்மார்ட் வகுப்புகளை நடத்தாத பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கூறுகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என முடிவெடுத்து அரசு நடைமுறைப்படுத்தும் பல்வேறு திட்டங்கள், பாட திட்டங்கள் சரிவர செயல்படுத்தாமல் விடப்படுவதால் தான் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறைந்து கொண்டே வருகிறது.

அதனால் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களும் ஒத்துழைப்பு அளித்தால் தான் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்த இடத்தை எட்டும் என்பது பெற்றோர்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com