பிளஸ் 2 கணிதத் தேர்வு கடினம்: 'சென்டம்' குறைய வாய்ப்பு: முறைகேட்டில் ஈடுபட்ட 18 மாணவர்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வில் 18 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். 
பிளஸ் 2 கணிதத் தேர்வு கடினம்: 'சென்டம்' குறைய வாய்ப்பு: முறைகேட்டில் ஈடுபட்ட 18 மாணவர்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வில் 18 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். 
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழித் தாள்களுக்குப் பிறகு கணிதத் தேர்வு திங்கள்கிழமை (மார்ச் 12) நடைபெற்றது. இது குறித்து சென்னையைச் சேர்ந்த பாண்டியன், மதுபாலா, நவீன் உள்ளிட்ட மாணவர்கள் கூறியது:- கணித வினாத்தாளை வாங்கி என்னென்ன வினாக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தபோது எங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனெனில் காலாண்டு, அரையாண்டு, இடைப்பருவத் தேர்வுகளில் கேட்கப்படாத பல வினாக்கள், புதிய வினாக்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. 6 மதிப்பெண் பகுதியில் 15 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் 10 வினாக்களுக்கு மட்டும் விடையளித்தால் போதும் என்ற நிலையிலும் அணிக்கோவை (வினா எண் 41), தொடுகோடு, செங்கோடு சமன்பாடு, ஒரு குலத்தின் சமனி உறுப்பு ஒருமைத்தன்மை வாய்ந்தது என நிரூபிக்க (வினா எண் 52), வெக்டர், கார்டீசியன் சமன்பாடுகள் (55) உள்பட பெரும்பாலான வினாக்கள் கடினமாகவே இருந்தன. 1 மதிப்பெண், 10 மதிப்பெண் பகுதியில் வினாக்கள் புத்தகத்துக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்ததாலும் ஓரளவுக்கு பதிலளிக்கக் கூடியதாக இருந்தது. கணித வினாத்தாள் சற்று கடினமாக இருக்கும் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் சற்று கடினமாகவே இருந்தது என்றனர்.
மேலும் 200-க்கு 200 மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்வுக்கு கடினமாக உழைத்தோம். ஆனால் தற்போது 180 மதிப்பெண் பெறுவதே பெரிய விஷயம் என மாணவர்கள் தெரிவித்தனர். 
'சென்டம் குறையும்': இது குறித்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் எம்.விஜயபானு கூறியது:- பிளஸ் 2 பொதுத்தேர்வு கணித வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது உண்மைதான். குறிப்பாக 6 மதிப்பெண் பகுதியில் சில எதிர்பாராத வினாக்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் 10 மதிப்பெண், 1 மதிப்பெண் பகுதிகளில் நன்கு தெரிந்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால் சுமாராக படிக்கும் மாணவர்கள்கூட எளிதில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது. 
மற்ற தேர்வுகளைக் காட்டிலும் கணிதத் தேர்வில்தான் முழு மதிப்பெண் பெறுவது எளிது. ஆனால், இந்த முறை 'சென்டம்' (200-க்கு 200) பெறும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என்றார். 
இந்தத் தேர்வில் தமிழகம் முழுவதும் 18 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 6 மாணவர்கள் பிடிபட்டுள்ளதாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com