பிஎஸ்என்எல் மூலம் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி

பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி
பிஎஸ்என்எல் மூலம் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி

சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சார்பில், மாணவர்கள், இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, சென்னை மீனம்பாக்கத்தில் ராஜீவ் காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இளைஞர்களுக்கு இந்த மையத்தில் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகளை முடித்த இளைஞர்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தின்கீழ் இயங்கும் இந்தப் பயிற்சி மையத்தில் அகண்ட அலைவரிசை, பைபர் சிஸ்டம்ஸ், செயற்கை இழை (ஆப்டிகல் பைபர்) தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ மொபைல் டெக்னாலஜி ஆகியவை தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒரு வாரம், மூன்று வாரங்கள், ஐந்து வாரங்கள் என இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அடுத்தாண்டு முதல் பயிற்சிக் காலத்தை 10 வாரங்களாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு  பிஎஸ்என்எல் மற்றும் இதர தொலைத்தொடர்பு  நிறுவனங்களில் தொழில்நுட்பப் பணியாளர் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தல், கண்காணித்தல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.10,000 - ரூ.16,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
மேலும், இந்தப் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு பிஎஸ்என்எல் "பிரீபெய்டு' நேரடி விற்பனையாளர் என அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அத்துடன், "பிரீபெய்டு' கடைகள் அமைத்துக் கொள்ளவும் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
இதேபோல், கிண்டி திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தோடு இணைந்தும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், "நெட்வொர்க் என்ஜினியரிங்' என்னும் பயிற்சி அடுத்தாண்டு முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
கடந்த 2013-14-இல் 3 ஆயிரம் பேர், 2014-15-இல் 5 ஆயிரம் பேர், 2015-16-இல் 4,100 பேருக்கு இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டும் 350 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் இந்தப் பயிற்சியைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
மேலும், அடுத்த ஆண்டு முதல் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, படித்த வேலையில்லாத இளைஞர்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com