மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தத் தேர்வுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவிப்பு: இந்தத் தேர்வுக்கான அறிவிப்பை ஏற்கெனவே ஜூன் மாதம் சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. அதில் இந்தத் தேர்வானது வரும் செப்டம்பர் 16 -ஆம் தேதி நடத்தப்படும் எனவும், இதற்கு ஜூன் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், திடீரென இந்த அறிவிப்பு நிறுத்தப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்தது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் அறிவிப்பு: இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான புதிய அறிவிப்பை சி.பி.எஸ்.இ. செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, சி.டி.இ.டி. தேர்வுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27 கடைசி நாள் எனவும், கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 30 கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழு விவரங்களும் புதன்கிழமை www.ctet.nic.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

கல்வித் தகுதி: கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகளில் 5 -ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

8 -ஆம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப்படிப்புடன், 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்; அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com