டி.என்.பி.எஸ்.சி. ‘குரூப் 4’  தேர்வு வினாத்தாளில் தரம் காப்பாற்றப்பட்டதா..? 

அசம்பாவிதம் எதுவுமின்றி மிக நேர்த்தியாக நடந்து முடிந்து கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட மொத்தம் 9,351
டி.என்.பி.எஸ்.சி. ‘குரூப் 4’  தேர்வு வினாத்தாளில் தரம் காப்பாற்றப்பட்டதா..? 

அசம்பாவிதம் எதுவுமின்றி மிக நேர்த்தியாக நடந்து முடிந்து கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட மொத்தம் 9,351 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு வினாத்தாளில் வியப்பும், கடினமும் இருந்ததே தவிர, தரம் காப்பாற்றப்படவில்லை என தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் பதவி (494), இளநிலை உதவியாளர் (4,096), இளநிலை உதவியாளர் பிணையம் (205), வரித்தண்டலர் (48), நில அளவையர் (74), வரைவாளர் (156), தட்டச்சர் (3,463), சுருக்கெழுத்து தட்டச்சர் (815) என 9 ஆயிரத்து 351 பணி இடங்களை நிரப்புவதற்கு முதல் முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு பிப்ரவரி 11-ம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் அதிகபட்சமாக இந்த தேர்வை எழுத 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதற்கான எழுத்துத் தேர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(பிப்.11) நடைபெற்றது. 

இதற்காக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 962 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் மட்டும் 508 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்கள், கண்காணிப்பாளர்கள், பல லட்சம் தேர்வர்கள் என இரண்டே மாதங்களில் பரபரப்பாக செயல்பட்டு இந்த போட்டித் தேர்வினை குறித்த நாளில் குறித்த நேரத்தில், எவ்வித குறைபாடுமின்றி துல்லியமாகவும் நேர்த்தியாக நடத்தி முடித்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

கடந்த காலங்களில் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் சில தேர்வர்கள் விடைத்தாள்களில் தவறாக பதிவு எண்ணை எழுதியதால் அவர்களுக்கு மதிப்பெண் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் இந்த முறை தேர்வர்கள் பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்ப பாடம், தேர்வு மையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் அச்சடிக்கப்பட்ட விடைத்தாள் வழங்கப்பட்டது. மேலும் விடைத்தாளில் பதில் அளிக்காமல் விடப்பட்டுள்ள கட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதனை குறிப்பிடும் முறையும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக தேர்வு நேரம் முடிந்த பின்னர் தேர்வர்களுக்கு 5 நிமிடம் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த புதிய நடைமுறையால் குரூப் 4 தேர்வு முடிவுகள் கால தாமதமின்றி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாணையத்தின் புதிய முயற்சிக்கு தேர்வர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

சில நாட்களாக, பணியாளர்கள் தேர்வு விவகாரத்தில் ஊழல் செய்திகளால் கல்வித்துறை, பணியாளர் தேர்வாணையம் மற்றும் மனிதவள மேலாண்மை மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற குரூப் 4 தேர்வு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. 

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பாடப்பகுதிகளில் இருந்து அதிகமான கேள்விகள் இடம் பெற்றிருந்தது. அதை மட்டும் நன்கு படித்தவர்களுக்கு இந்த தேர்வு எளிமையானதாக இருந்திருக்கும். சென்ற ஆண்டு தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த கேள்விகளும் அதிகம் கேட்கப்பட்டிருந்தது.

பொது அறிவுப் பகுதியில் இந்த முறை மிகப் பெரிய மாற்றம் செய்துள்ளது பளிச்செனத் தெரிகிறது.

காலம் காலமாக போட்டித் தேர்வுகளில் முக்கிய இடம் பிடித்து வந்த ‘இந்திய தேசிய இயக்கம்’ அதாவது சுதந்திரப் போராட்ட வரலாறு ஒதுக்கப்பட்டிருப்பதும், பொதுப் பாடப் பகுதியில், தமிழ்நாடு குறித்த வினா, தமிழர் பண்பாடு, நாகரிகம், கலைகள் பற்றிய வினாக்கள் இடம்பெறவில்லை.

இந்திய அரசியலில் அதிகம் அறியப்படாத பகுதிகள்; நடப்பு நிகழ்வுகளில் அதிகம் கேள்விப்படாத செய்திகள்; அறிவியலில், தாவரவியல், விலங்கியல் விட்டு விலகி, இயற்பியல், வேதியியல் சார்ந்த கேள்விகள்; கணிதப் பாடத்தில் மட்டும் கேள்விகள் கேட்டு, அறிவுத் திறன் சார்ந்த ஒரு சில வினாக்களோடு நிறுத்திக் கொண்டது. 

வியப்பை அளித்த வினாக்கள்: சில வினாக்கள் தேர்வு எழுதியவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. அதாவது ‘இந்தியா - மாலத்தீவு’ இடையிலான ராணுவ ஒத்திகைக்கு என்ன பெயர்?, 2017 டிசம்பரில் இந்திய விமானப் படையில் இருந்து கழற்றி விடப்பட்ட ஊர்தி எது?, அக்டோபர் 2017-ல் ஜவுளித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது? போன்ற வினாக்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் குரூப்-4 நிலை எழுத்தர் பணிக்கான தேர்வு எழுதும் தமிழக இளைஞர்களுக்கான வினாக்களாகவே அமைந்திருந்தது வியப்பை ஏற்படுத்தியது.

தமிழக வளங்கள், வனங்கள், மலைகள், ஆறுகள், கலைகள், தொழில்கள், கோயில்கள், பூங்காக்கள், நிறுவனங்கள், இயக்கங்கள், தலைவர்கள் பற்றி கேள்விகள் தவிர்க்கப்பட்டிருப்பதுடன் அக்டோபர் 17 அன்று தில்லியில் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனம் எது என்ற வினா வருத்தத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

அறிவியல், கணிதப் பகுதிகளில் நேரடியாகப் பள்ளி சம்ச்சீர் பாட புத்தகங்களிலிருந்து வந்த வினாக்கள் மட்டும்தான் சற்று ஆறுதலான் தகவல் என்றாலும், பொது அறிவுப் பகுதியைக் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவுக்குக் வினாக்கள் அமைந்திருந்தது.   

இதே நிலையில் தான் மொழித் தாளும் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறள், சங்க இலக்கியம், நீதிநெறி இலக்கியம், பக்தி இலக்கியம், பாரதியார் பாடல்கள் போன்றவை உணர்த்தும் வாழ்வியல் நெறிகள், விழுமியங்களைக் கருத்தில் கொண்டு  எந்தக் வினாவும் அமையபெறமால், தனி நபர் பெற்ற பட்டங்கள், பாராட்டுகள், அவர்களின் விருப்பங்கள், புள்ளி விவரங்கள் போன்ற வினாக்களே இடம் பெற்றிருந்தன.

குறிப்பாக ‘பாரதியார், யாருடைய சாயலில், வசன கவிதை எழுதத் தொடங்கினார்?’, எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் திருக்குறள் வைக்கப்பட்டு இருக்கிறது..? என்ற வினா தேர்வர்களின் புருவத்தை உயர்த்தியது. 

தமிழகத்தில் அரசு நிர்வாகம் நேர்மையானதாக, வெளிப்படைத்தன்மை கொண்டதாக, சாமான்யர்களிடம் பரிவு கொண்டதாக இருத்தல் வேண்டும். அதற்கு வழி கோலுவதாக, ஆணையத்தின் போட்டித் தேர்வுகள் அமைய வேண்டும்.

9,351 பணியிடங்களுக்கான பல லட்சம் தேர்வர்களில் சுமார் 9,600 பேர் மட்டுமே தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலையில், இரண்டு வகை வினாக்கள் மட்டுமே சாத்தியம். அதாவது அதிகம் அறியப்படாத வினா, கடினமான வினாக்கள் தான் கேட்க முடியும். 

ஆனால், அவற்றுள்ளும் வாழ்வியல் நெறிமுறைகளை, உயர்ந்த விழுமியங்களையும் பொருத்த முடியும் என்பதை நினைவில்கொள்ளாமல் தேர்வாணையம் திசைமாறிப் பயணித்துள்ளதாகவே தெரிகிறது. வினாக்களில், 'வியப்பும்' ‘கடினம்’ கொண்டு வந்த அளவுக்கு, தரம் காப்பாற்றப்படவில்லை என்றே தேர்வர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும் சேர்த்துதான் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கிராமப்புற நிர்வாகம் பற்றிய கேள்விகளும் கேட்கப்படவில்லை" என்பது வேதனையான ஒன்றுதான்.

முன்பு போல் இல்லாமல் இந்த முறை, விளையாட்டு, விண்வெளி ஆராய்ச்சி, சுற்றுச்சூழல், அரசின் மக்கள் நலத் திட்டங்கள், பள்ளிப்பாட கணிதம், அறிவியல் பகுதிகளில் கவனம் செலுத்தி உள்ளது என்பது சிறப்பு.

9 ஆயிரத்து 351 பணியிடங்களுக்கு 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதி உள்ளதால், ஒரு பணி இடத்துக்கு 187 பேர் போட்டியிட்டுள்ளனர். தேர்வுக்கு முன்பு வரை தேர்ச்சி பெறுவதற்கான ‘கட்-ஆஃப்’ அதிகமாக இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. தேர்வுக்கு பின்னர் அப்படி இருக்காது என்றும் பரவலாக பேசப்பட்டது.

தமிழக அரசு நிர்வாகத்துக்கு யார் வர வேண்டும் என்பதைவிடவும் யார் வரக் கூடாது என்பதை மனதில் கொண்டு தமிழர்களைப் புறக்கணிக்கும் விதமாகவே 
வினாக்கள் அமைந்திருந்தாலும் குறைந்த காலத்தில் குறித்த நாளில் குறித்த நேரத்தில், எவ்வித குறைபாடுமின்றி துல்லியமாகவும் நேர்த்தியாகவும் தேர்வை நடத்தி பெருமை சேர்த்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒரு சபாஷ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com