நியாய விலைக் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேர்காணல்

திருநெல்வேலி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 117 விற்பனையாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் புதன்கிழமை தொடங்கியது.
நியாய விலைக் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேர்காணல்

திருநெல்வேலி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 117 விற்பனையாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில் 807 முழுநேர நியாய விலைக் கடைகள், 375 பகுதிநேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1,182  நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில் விற்பனையாளர் பணிக்கு 117 காலியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 18 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்தனர்.  தகுதியான விண்ணப்பதாரர்கள் 15 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலில் கலந்துகொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. 

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் புதன்கிழமை தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் நேர்காணல் நடந்தது. வேலைநாள்களில் காலையில் 750 பேர்,  பிற்பகலில் 750 பேர் என தினமும் 1,500 பேர் வீதம் 10 நாள்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடைபெறுகிறது.

கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி மேற்பார்வையில் 220 அலுவலர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 30 தாற்காலிக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குடிநீர், கழிப்பறை, நிழற்கூரை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: "விற்பனையாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.5,000 வீதம் ஓராண்டுக்கு வழங்கப்படும்.  அதன் பிறகு காலமுறை ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், எம்.பில். பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் உள்பட 18,200 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் தகுதியான விண்ணப்பதாரர்கள் 15 ஆயிரம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com