பிரிட்டனுக்கு ஆதரவு கொடுக்க முடியாது

மகாத்மா காந்தி பின்கண்ட அறிக்கையை விடுத்திருக்கிறார்:பேச்சுவார்த்தைகளுக்கும், சமரசத்திற்கும் இடமில்லாமல்
பிரிட்டனுக்கு ஆதரவு கொடுக்க முடியாது

மகாத்மா காந்தி பின்கண்ட அறிக்கையை விடுத்திருக்கிறார்:
பேச்சுவார்த்தைகளுக்கும், சமரசத்திற்கும் இடமில்லாமல் காங்கிரஸ் கதவை அடைத்துவிட்டதாவென்று, லண்டனிலிருந்து ஒரு கேள்வி வந்திருக்கிறது. காங்கிரஸ் கதவை அடைக்கவில்லை யென்பதே, அத்தீர்மானத்திற்கு நான் செய்யும் வியாக்யானம். கதவு லார்ட் ஜெட்லண்டால் அடைக்கப்பட்டுவிட்டது. காங்கிரஸ் சம்பந்தப்பட்ட வரையில், அவர் சொல்லும் நிபந்தனைகளின் மீது பேச்சுவார்த்தைகள் நடத்த முடியாது. தன் மீது அன்னியர் ஆதிக்கம் செலுத்துவதையும், தானே சுரண்டப்படுவதையும் நிர்க்கதியாகப் பார்த்துக்கொண்டு இந்தியா அதற்கு உடந்தையாயிராது. பிரிட்டனைப் போல் இந்தியாவும் சுதந்தர நாடாகும் வரையில், இந்தியா ஓய்வெடுத்துக் கொள்ளாது. இந்தியா, அஹிம்ஸையை தனது நிலைத்த கொள்கையாக ஒப்புக்கொண்டு விட்டால், பிரிட்டனை விட அதிக சுதந்தரமாகவும் இருக்கும்.
கடலில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கும் பிரிட்டனுக்கு, தன் சுதந்தரத்தை இழக்கும் ஆபத்து வந்திருக்கிறது. நல்ல பலனளிக்கத் தக்க பரிகாரம் ஒன்றை நான் சொல்லியிருக்கிறேன். இந்தியா சுதந்தரம் பெறப்போவது காங்கிரஸ் மூலம்தானா இல்லையாவென்பது வேறு விஷயம். சுதந்தரத்துக்கு குறைவாக இந்தியாவுக்கு கொடுக்கப்படுவதாயிருந்தால், காங்கிரஸ் எந்த சமரசத்திற்கும் உடன்படாது என்பதை அத்தீர்மானம் சந்தேகத்திற்கிடமில்லாத பாஷையில் சொல்லுகிறது.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதைத் தவிர பிரிட்டிஷ் நோக்கம் வேறொன்றுமில்லையென்பது தெரிந்திருக்கிறதாகையால், காங்கிரஸின் செல்வாக்குக்குட்பட்ட இந்தியா, யுத்தத்தில் சம்பந்தப்படாதென்பதையும் காங்கிரஸ் தெளிவாக்கியிருக்கிறது. அதாவது காங்கிரஸ், பிரிட்டனுக்கு தன் தார்மீக ஆதரவை கொடுக்க முடியாது.

தினமணி (03-03-1940)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com