வினோபா பாவே- முதல் சத்யாக்ரஹி

இன்று காலை மகாத்மா காந்தி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:-""சட்ட மறுப்பை ஸ்ரீ. வினோபா பாவே ஆரம்பிப்பார். அவர் மாத்திரம் இயக்கத்தில் ஈடுபட்டிருப்பார்.
வினோபா பாவே- முதல் சத்யாக்ரஹி

இன்று காலை மகாத்மா காந்தி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:-

""சட்ட மறுப்பை ஸ்ரீ. வினோபா பாவே ஆரம்பிப்பார். அவர் மாத்திரம் இயக்கத்தில் ஈடுபட்டிருப்பார். சட்ட மறுப்பு இயக்கம் தனிப்பட்டவர்கள் கலந்து கொள்வதாக இருந்தாலும், அதுவும் அவர் மாத்திரம் நடத்தும் இயக்கமாக இருப்பதாலும், இதரர்கள் மறைமுகமாகவோ நேரிடையாகவோ ஈடுபடாத விதத்தில் அது நடத்தப்படும். ஆனால், அது பேச்சு சுதந்திரம் சம்பந்தமானதாகையால், ஓரளவுக்கு பொது ஜனங்களும் அதில் ஈடுபடுவார்கள். வினோபா பாவே பி.ஏ. படித்துக் கொண்டிருந்தார்; நான் 1916ம் வருஷத்தில் இந்தியா திரும்பியதும் அவர் காலேஜ் படிப்பை விட்டார். அவர் சமஸ்கிருத அறிவாளி. ஆசிரமம் ஆரம்பமான போதே அதில் சேர்ந்தார். அவர்தான் முதலில் சேர்ந்தவர்.

ஸ்ரீ. வினோபா, தமது ஹிருதயத்திலிருந்து தீண்டாமையை அடியோடு ஒழித்துவிட்டார். வகுப்பு ஒற்றுமையில் எனக்கு எவ்வளவு பிரேமையுண்டோ அவ்வளவு பிரேமை அவருக்குமிருக்கிறது. நன்கு புரிந்து கொள்ளுவதற்காக அவர் குர் ஆனை படித்து ஆராய்வதில் ஒரு வருஷ காலத்தை செலவிட்டார். அவர் இருந்த இடத்திற்கு பக்கத்திலுள்ள முஸ்லிம்களுடன் ஜீவனுள்ள தொடர்பை வைத்துக் கொள்ள, அந்த ஆராய்ச்சி அவசியமென அவர் கருதினார். அவருக்கு சிஷ்ய கோடிகளும், ஊழியர்களும் ஏராளமாக இருக்கின்றனர். அவர் சொன்னால் அவர்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். குஷ்டரோகிகளுக்கு சேவை செய்வதற்கு தன் வாழ்நாளையே அர்ப்பணம் செய்த ஒரு இளைஞனை தயாரித்த பெருமையும் அவருக்கு உண்டு. 

அரசியல் சுதந்திர அவசியத்தில் அவருக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் கதரை பிரதானமாகக் கொண்ட நிர்மாண திட்டமின்றி கிராமவாசிகளுக்கு உண்மையான சுதந்திரம் வருவது சாத்தியமில்லை என்று அவர் நம்புகிறார். அஹிம்சைக்கு ரொம்ப சரியான வெளிச் சின்னம் சர்க்கா என நினைக்கிறார்.''


தினமணி (16-10-1940)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com