கை ராட்டைக்கு முக்கியத்துவம் தரும் காந்தி ஜெயந்தியின் சுவாரஸ்யப் பின்னணி!

மகாத்மா தனது பிறந்த நாளை கை ராட்டை தினமாகக் கொண்டாட சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. கை ராட்டை என்பது அந்தக் காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்த புனிதக்கருவி.
கை ராட்டைக்கு முக்கியத்துவம் தரும் காந்தி ஜெயந்தியின் சுவாரஸ்யப் பின்னணி!

இன்று காந்தி ஜெயந்தி இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள். இது இந்தியாவில் அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை தினம். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய அளவில் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007 ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "அனைத்துலக வன்முறையற்ற நாளாக’ சர்வதேச அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நூற்பு வேள்வி...

நம் தேசப்பிதாவான காந்தி மகாத்மாவின் பிறந்தநாளைக் கொண்டாட அவர் மீதும் அவர் மேற்கொண்ட சுதந்திரப் போராட்ட முறைகளின் மீதும் பெருமதிப்பும், அபிமானமும் கொண்ட கோடிக்கணக்கான மக்கள் விரும்பிய போதும் மகாத்மா அதை ஒருபோதும் விரும்பினாரில்லை. ஆனால், இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்ட இந்த மாமனிதரின் பிறந்தநாளை நாடு எப்பாடுபட்டேனும் நினைவுகூர்தல் வேண்டும் என்று தேச விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் பலர் விரும்பியதால் அவர்களின் முயற்சி மற்றும் வற்புறுத்தலின் காரணமாக மகாத்மா தனது பிறந்த நாளை கை ராட்டை தினமாகக் கொண்டாட சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. கை ராட்டை என்பது அந்தக் காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்த புனிதக்கருவி. இந்தக் கை ராட்டையை நம்பியே அண்ணல் தமது அந்நிய துணிகள் பகிஸ்கரிப்பு போராட்டத்தை தீரத்துடன் முன்னெடுத்தார்.  மகாத்மாவுக்கு கை ராட்டையின் மீதிருந்த பற்றின் காரணமாக அவரது பிறந்த நாளை முன்னிட்டு 24 மணி நேர நூற்பு வேள்வி நிகழ்த்தப்பட்டது. 1969 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ரா. கிருஷ்ணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற காந்திஜி நூற்றாண்டு விழா நூற்பு வேள்வியில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று கைராட்டையில் நூல் நூற்று விழாவைச் சிறப்பித்தனர்.

ரா.கிருஷ்ணசாமி அவர்கள் பயன்படுத்திய பெட்டி ராட்டை...

மகாத்மாவுக்கு கைராட்டையின் மீதிருந்த ப்ரியம் உலகறிந்த உண்மை. ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்திய தேசியக் கொடியின் மையத்தில் நாம் இன்று காணும் அசோகச் சக்கரத்திற்குப் பதிலாக இடம்பெற்றிருந்தது கைராட்டையே! ஆந்திராவைச் சேர்ந்த பிங்கலி வெங்கையா எனும் சுதந்திரப் போராட்ட வீரர் வடிவமைத்த பல்வேறு விதமான இந்திய தேசியக் கொடி மாதிரிகளில் கைராட்டைக் கொடியே இந்திய சுதந்திரத்திற்கு முன்பு வரையிலும் பயன்பாட்டில் இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நாக்பூரில் நடைபெற்ற பேரணியில் இக்கொடியே ஏந்திச் செல்லப்பட்டது. இந்தக்கொடிக்கு சுவராஜ்யக் கொடி என்று பெயர். 

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு டாக்டர்.ராஜேந்தாரபிரசாத், மௌலானா அபுல்கலாம்ஆசாத், சரோஜினி நாயுடு, ராஜாஜி, கே.எம்.முன்ஷி, அம்பேத்கார் ஆகியோரைக்கொண்ட குழு தேசியக்கொடியில் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டுவந்தது.அதன்படி கைராட்டைக்கு பதிலாக அசோகச் சக்கரம் அப்போது முதல் பயன்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com