தேசத்துக்கு காந்தியின் வேலைத்திட்டம்

காந்திஜி சமர்ப்பித்த வேலைத்திட்ட தீர்மானத்தைப் பற்றியே இன்று காலைக் கூட்டத்தில் காரியக் கமிட்டி ஆலோசித்திருக்கிறது.
தேசத்துக்கு காந்தியின் வேலைத்திட்டம்

காந்திஜி சமர்ப்பித்த வேலைத்திட்ட தீர்மானத்தைப் பற்றியே இன்று காலைக் கூட்டத்தில் காரியக் கமிட்டி ஆலோசித்திருக்கிறது. சென்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது சொல்லப்பட்ட அநேக காரியங்கள் காந்திஜியின் திட்டத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
சென்ற இரண்டு சத்யாக்கிரகங்களிலும் அடைந்த அநுபவத்தைக் கொண்டு பழைய திட்டங்களில் சில திருத்தங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
கமிட்டி அங்கத்தினர்களிடம் காந்திஜி தமது திட்டத்தைப் பற்றி விரிவாக விளக்கம் செய்தாராம். அண்மையிலும் வருங்காலத்திலும் என்னென்ன வேலைகள் நடக்க வேண்டுமென்றும் அடுத்த தேசீய இயக்கத்தில் தாம் தலைமை வகிக்க வேண்டுமெனில் என்னென்ன காரியங்கள் பூர்வாங்கமாக நடைபெற வேண்டுமென்றும் காந்திஜி விவரித்ததாகத் தெரிகிறது.
தேசத்திலேற்பட்டுள்ள ராஜீய நெருக்கடிப் பற்றி 28 மணி நேரமும் இனிச் செய்ய வேண்டிய வேலைத்திட்டம் பற்றி 10 மணி நேரமும் ஆலோசனை செய்திருக்கிறதெனின் நிலைமையின் கடுமையை ஒருவாறு ஊகித்துக்கொள்ளலாம். 
ஐரோப்பாவுக்கு செல்ல மே 2ம் தேதி பம்பாயில் கப்பலேறப் புறப்பட்ட இருந்த ஸ்ரீ புலாபாய் தேசாய் இங்கிருந்து தமது பிரயாணத்தை ஒரு நாள் ஒத்திவைத்திருக்கிறார். அலகாபாதில் 2 நாளுக்கு மேல் தங்குவதில்லையென்று வந்த மகாத்மா காந்தி இன்னமும் தங்கியிருக்குமாறு ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்தும் எவ்வளவு முக்கியமான ஆலோசனைகள் நடந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.
வருங்கால வேலைத்திட்டத்தைப் பற்றிப் பேசும்போது, நேருஜி நல்ல முறையான திட்டம் வேண்டும் என்று வாதாடினாராம். காந்திஜியோ கொஞ்சம் ஜாக்கிரதையோடு மெதுவாகச் செல்வோம் என்று யோசனை கூறினாராம். அனாவசியமாக யாரையும் விரோதித்துக்கொள்ள வேண்டாமென்பது காந்திஜியின் கருத்தென்று தெரிகிறது.

தினமணி (30-04-1937)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com