காரியக் கமிட்டியே தீர்மானிக்கும்!

வைஸ்ராய் செய்தியின் நகல் ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு, நிருபர் இன்று காலை சிவகிராமத்திலுள்ள காந்திஜியின் ஆசிரமத்திற்குச் சென்றார்.
காரியக் கமிட்டியே தீர்மானிக்கும்!

வைஸ்ராய் செய்தியின் நகல் ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு, நிருபர் இன்று காலை சிவகிராமத்திலுள்ள காந்திஜியின் ஆசிரமத்திற்குச் சென்றார்.
 சேத் ஜம்னாலால் பஜாஜுடனும், மற்ற ஊழியர்களுடனும் காந்திஜி பேசிக் கொண்டிருந்தார். நிருபரை கொஞ்ச நேரம் இருக்கச் செய்தார். 15 நிமிஷங்கள் கழித்து நிருபரை உள்ளே அழைத்தார். ஏற்கனவே வைஸ்ராய் செய்தியின் நகல் ஒன்று உள்ளே அனுப்பப்பட்டிருந்தது. அதை நிருபரிடம் திருப்பிக் கொடுத்தார்.
 நிருபர் சாவதானமாக அறிக்கை பூராவையும் வாசித்தார். காந்திஜி கவனமாகக் கேட்டுக்கொண்டே வந்தார். அறிக்கை வாசித்து முடித்ததும், "சரி, என்ன வேண்டும், சொல்லுங்கள்'' என்றார்.
 "இதைப் பற்றி உங்கள் அபிப்ராயம் வேண்டும்'' என்று நிருபர் கூறினார்.
 காந்தி தோளை ஆட்டிக்கொண்டே, "சரி, நான் சொல்வதை எழுதிக்கொள்ளுங்கள்'' என்று ஜாடை காட்டினார்.
 "வைஸ்ராய் செய்தியை ரொம்ப கவனமாகக் கேட்டேன். ஆனால், நான் எதுவும் அபிப்ராயம் சொல்ல முடியாததற்கு வருந்துகிறேன்.
 மிகக் கவலையுடன் கவனிக்க வேண்டிய இந்தப் பிரச்னையைப் பற்றி ஜூலை 5ந் தேதியன்று காரியக் கமிட்டி முடிவாகத் தீர்மானித்துவிடும். எந்த காங்கிரஸ்காரரும் காரியக் கமிட்டி தீர்மானத்திற்கு முன் அபிப்ராயம் கூற விரும்பமாட்டாரென்று நம்புகிறேன்'' என்றார்.
 பிறகு சிவகிராம வாசிகளைப் பற்றி பேச்சு எழுந்தது. சிவகிராமம் ரொம்ப அபிவிருத்தியடைந்து விட்டதென்றும், வார்தாவில் வேறெந்த இடத்திலும் இருப்பதைவிட நல்ல பசுக்கள் சிவகிராமத்தில் இருப்பதாகவும் சொன்னார். "ஜனங்கள் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல காற்று ஏராளமாகக் கிடைக்கிறது. எனக்கு கிடைப்பதைவிட நிறைய கிடைக்கிறது. ஏனெனில் அவர்கள் தைரியசாலிகள்; கபடு, சூது தெரியாதவர்கள்'' என்றார்.


தினமணி (23-06-1937)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com