மலேரியாவுக்கு மஞ்சளில் மருந்து கண்டறிந்தவர்!

மருத்துவம், விவசாயம், சுகாதாரம்,  சூழலியல் உள்ளிட்ட பல துறைகளில் தற்போது உயிரித் தொழில்நுட்பம் (Bio Technology) கோலோச்சுகிறது.
மலேரியாவுக்கு மஞ்சளில் மருந்து கண்டறிந்தவர்!

மருத்துவம், விவசாயம், சுகாதாரம்,  சூழலியல் உள்ளிட்ட பல துறைகளில் தற்போது உயிரித் தொழில்நுட்பம் (Bio Technology) கோலோச்சுகிறது. உயிர் வேதியியல், மூலக்கூறு உயிரியல், மரபணுப் பொறியியல், நுண்ணுயிரியல், உயிர்த்தகவல் தொழில்நுட்பம் ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டதாக இன்று பெருவளர்ச்சி கண்டுள்ள துறை இது. 1970-களில்தான் இத்துறை கல்வித்துறையிலும் ஆராய்ச்சியிலும் இடம் பெற்றது. இத்துறையில் ஆரம்பகால விஞ்ஞானியாக நுழைந்து, நாட்டின் முன்னோடியாகத் திகழ்பவர், கோவிந்தராஜன் பத்மநாபன்.

அடிப்படையில் உயிர் வேதியியலாளரான (Bio Chemist) கோவிந்தராஜன், மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக மஞ்சளிலிருந்து எடுக்கப்பட்ட கர்குமின் (Circumin) என்ற மூலக்கூறைப் பயன்படுத்தி கூட்டு மருந்து தயாரிப்பதில் வெற்றி கண்டவர். பல உயர்பதவிகள் கிடைத்த நிலையிலும், அவற்றைத் தவிர்த்து தீவிரமான தொடர் ஆய்வுகளில் ஈடுபட்ட அவரால், அடுத்து வரும் தலைமுறைகளுக்குத் தேவையான கள ஆதாரங்களும், வசதிகளும், ஆய்வு அடிப்படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

கோவிந்தராஜன் பத்மநாபனின் பூர்வீகம் தமிழகத்தின் தஞ்சாவூர். ஆனால், அவரது குடும்பம் பெங்களூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு 1938 மார்ச் 20-இல் ஜி.பி. பிறந்தார்.

பெங்களூரில் பள்ளிக் கல்வியை முடித்த அவர், பிறகு பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த படிப்பு தனக்கு ஒத்துவராது என்று உடனேயே புரிந்துகொண்ட அவர், அதிலிருந்து விலகி, சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு வேதியியலில் பி.எஸ்சி. பட்டம் (1958) பெற்றார். அடுத்து தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் (IARI) சேர்ந்து மண் வேதியியலில் எம்.எஸ்சி. பட்டம் (1960) பெற்றார்.

பிறகு பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IIsc) சேர்ந்து உயிர் வேதியியலில் பிஎச்.டி. பட்டம் (1966) பெற்றார். அடுத்த மூன்றாண்டுகளில் அதே நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகவும் இணைந்தார். அதற்கு முன்னர், வெளிநாடு சென்று படித்து வந்தவர்களையே ஐஐஎஸ்சி-யில் பணியில் அமர்த்துவது வழக்கமாக இருந்தது. ஆனால், உள்நாட்டுத் திறமையாளர்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என்று அப்போதைய இயக்குநர் சதீஷ் தவான் எடுத்த முடிவால், முதல் முறையாக, உள்நாட்டில் படித்துத் தேறிய ஜி.பி. அங்கு பணியில் சேர முடிந்தது.

அங்கு பல நிலைகளில் ஜி.பி. பணியாற்றினார். உதவிப் பேராசிரியர் (1969- 1975), துணைப் பேராசிரியர் (1975- 1980), பேராசிரியர் (1980- 1998), இயக்குநர் (1994- 1998), மதிப்புறு விஞ்ஞானி (1998- 2005), சிறப்பு உயிரி தொழில்நுட்ப வல்லுநர் (2003-2009) ஆகிய பொறுப்புகளை வகித்த ஜி.பி, தற்போது அங்கேயே மதிப்புறு பேராசிரியராக உள்ளார். இதனிடையே, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)- பிரிட்டிஷ் கூட்டமைப்பின் கூட்டுறவில் லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனை  மருத்துவக் கல்லூரியில் இளம் விஞ்ஞானியாக (1969- 1970) அவர் செயல்பட்டார். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஃபுல்பிரைட் இருக்கை முதுநிலை விஞ்ஞானியாகவும் (1973- 1974), அதன் வருகைதரு பேராசிரியராகவும் (1975- 1986) அவர் பணியாற்றியுள்ளார்.

ஆய்வுப் பணிகள்
அவரது ஆரம்பகால ஆய்வுகளில் குறிப்பிடத் தக்கது, மனித உடலின் கல்லீரலில் உருவாகும் மெய்க்கருவுயிரிகளை (Eukaryotic) கட்டுப்படுத்தி படியெடுக்கும் பணியாகும். கலவுயிரியலில் ஹெம் அயனியின் (Heme in Cellular process) பங்களிப்பை விளக்குவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.

அவரது தலைமையில் இயங்கிய குழு மலேரியாவுக்குக் காரணமான ஒட்டுண்ணியை (Malerial Parasite) பிரித்தெடுப்பதிலும், அதற்கு மருந்துக் கட்டுப்பாட்டை உருவாக்குவதிலும் வெற்றி கண்டது. இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் கிருமி நாசினியான மஞ்சளில் உள்ள கர்கமின் என்ற மூலக்கூறுடன் ஆர்.டி-ஈதர் என்ற மருந்தைக் கூட்டு சேர்த்து மலேரிய ஒட்டுண்ணி பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஜி.பி. குழுவினர் 2004-இல் நிரூபித்தனர்.

சாதாரண மலேரியா, இறப்பை ஏற்படுத்தும் மூளைத்தாக்கு மலேரியா என மலேரியா இருவகைப்படுகிறது. இந்த இரு வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒட்டுண்ணியை திசு வளர்ப்பில் ஆராய்ந்து தாங்கள் உருவாக்கிய கூட்டு மருந்தால் அதைக் கொல்ல முடியுமா, அதன் பிறகு அதன் தாக்கம் இருக்கிறதா, மீண்டும் அதன் பாதிப்பு ஏற்படுகிறதா, என்று ஜி.பி. ஆராய்ந்தார். ஒரு வாரத்தில் மூளைத் தாக்கு மலேரியா கிருமியை அழிக்க முடியும் என்று கண்டறியப்பட்டது.

இந்த மருந்தின் வெற்றி சதவீதம் 95 ஆகும். இதன்மூலமாக உலக அளவில் மலேரியா பரவல் 50 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்து கேசரி பருப்பிலிருந்து  நச்சுக் கலப்பற்ற புரதச் சத்துணவை ஜி.பி. உருவாக்கினார். இது குழந்தைகளுக்கான துணைஉணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

பெனிசிலியத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் கோப்ரோஜென் (Coprogen) என்ற சேர்மத்தின் மூலமாக பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும் தலசேமியா எனும் ரத்தக் குறைபாட்டு நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கண்டறிந்தார். எய்ட்ஸ் நோய்க் கிருமிகளைக் கண்டறியும் எலிசா சோதனைக்கான புரதக்கூறையும் அவர் கண்டறிந்தார். ஆனால், அது சுகாதார அமைச்சகத்தால் பல ஆண்டுகளுக்குப் பிறகே ஏற்கப்பட்டது.  இத்தகைய தாமதங்கள் இளம் விஞ்ஞானிகளிடமும் புதிய தலைமுறை தொழில்முனைவோரிடமும்  நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றன என்று ஜி.பி. கூறினார்.

ஆய்வகத்தில் கண்டறியப்படும் புதிய கண்டுபிடிப்புகளை உற்பத்தி செய்தால் மட்டுமே அதன் பயன் மக்களைச் சென்றடைய முடியும். இந்த விஷயத்தில் இந்தியா இன்னமும் முழுமை பெறவில்லை. இதனை மாற்ற ஜி.பி. பல முயற்சிகளை மேற்கொண்டார். அதற்காக தனியார் நிறுவனங்களுடன் கூட்டுறவு மேற்கொள்வது பயனளிக்கும் என்றார் அவர். 1994- 1998-இல் அவர் ஐஐஎஸ்சி-யில் இயக்குநராக இருந்தபோது, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதே நோக்கில் ஸ்வீடனின் அஸ்ட்ரா, அமெரிக்காவின் மான்சண்டோ நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்த முயன்றார். அது விமர்சனத்துக்கு உள்ளானபோது, பதவியிலிருந்தே அவர் விலகினார். இத்தனைக்கும் அவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்க அரசு அப்போது தயாராக இருந்தது.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, (1983), இந்திய அரசின் பத்மஸ்ரீ (1991), பத்மபூஷண் (2003), தேசிய மருத்துவ அறிவியல் அகாதெமியின் உறுப்பினர், உயிரித் தொழில்நுட்பத் துறையின் பாஷின் விருது, காசி இந்து பல்கலைக்கழகத்தின் டி.எஸ்சி. பட்டம், சிறந்த உயிரித் தொழில்நுட்பவியலாளர் விருது (2003) உள்ளிட்ட பல விருதுகளையும் கெளரவங்களையும் ஜி.பி. பெற்றுள்ளார்.

ஜி.பி.யின் சுயசரிதையை மத்திய அரசின் விஞ்ஞான் பிரஸார் வெளியிட்டுள்ளது. இதற்கு அணிந்துரை எழுதியுள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், இந்நூலை விஞ்ஞானிகள் மட்டுமல்லாது, மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது ஆராய்ச்சிக் காலத்தில் சுமார் 30 ஆண்டுகள் வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல், உயர்பதவிகளைப் பற்றிய அக்கறையின்றி தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டதை அவர் பதிவு செய்திருக்கிறார். அவரது குடும்பப் பணிகளைக் கூட அவரது மனைவிதான் கவனித்துக் கொண்டார்.  "நான் நினைத்திருந்தால் தில்லியில் நிறுவப்பட்ட சர்வதேச மரபணு பொறியியல் ஆய்வு மையத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்க முடியும். ஆனால், விண்ணில் உள்ள நட்சத்திரங்களை எட்டுவதை விட, மண்ணில் அகழ்ந்து செல்வதையே நான் விரும்பினேன்'' என்று தனது சுயசரிதையில் அவர் கூறியிருப்பது, தன்னைப் பற்றிய சுருக்கமான விளக்கமாக இருக்கும்.

பதவிகளைக் கொண்டு தனிநபர்களை மதிப்பிடும் சூழல் நாட்டில் இருப்பதை அவர் பெரும் குறையாகவே காண்கிறார். அதனால், நல்ல விஞ்ஞானிகள் பலர் அதிகாரப் பதவிகளை வகிக்க நேர்வதால் அவர்களின் தொடர் ஆய்வுக்கு பங்கம் ஏற்படுகிறது என்கிறார் ஜி.பி. அதேபோல, செயற்கைக்கோள்கள், அணு ஆராய்ச்சி, மென்பொருள் உருவாக்கம் போன்றவை பெறுகின்ற முக்கியத்துவத்தால் அடிப்படை ஆய்வுகள் பாதிப்படைகின்றன என்றும் வருந்துகிறார்.

உயிரித் தொழில்நுட்பத் துறையில் இந்திய விஞ்ஞானிகளுக்கு முன்னோடியாக இருந்தபோதும், இப்போதும் எவ்விதப் பகட்டுமின்றி, பெங்களூரில் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தபடி, எளிய வாழ்வு வாழ்கிறார் கோவிந்தராஜன் பத்மநாபன்.
- வ.மு.முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com