ஜெலட்டின் கேப்ஸ்யூல்களுக்கு மாற்றாக இனி சைவ மாத்திரைகளைச் சாப்பிடலாமா?

ஜெலட்டின் கேப்ஸ்யூல்கள், வைட்டமின் சத்து மாத்திரைகள் மருந்துப் பொருள்கள்
ஜெலட்டின் கேப்ஸ்யூல்களுக்கு மாற்றாக இனி சைவ மாத்திரைகளைச் சாப்பிடலாமா?

ஜெலட்டின் கேப்ஸ்யூல்கள், வைட்டமின் சத்து மாத்திரைகள் போன்ற மருந்துப் பொருள்கள் மாட்டின் எலும்புகள், தோல், கால்நடைகளின் திசுக்கள் ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்பது பரவலாக அறியப்படாத உண்மை. இனி ஜெலட்டின் புரதம் தவிர்க்கப்பட்டு அதற்கு மாற்றாக சைவப் பொருளான செல்லுலோஸ் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்திருந்தது. கடந்த வருடம் இது குறித்து அறிக்கை வெளிவந்த மார்ச் மாதத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் நிபுணர் குழுவொன்றை நியமித்து இதிலுள்ள சாதக பாதகங்களைப் பற்றி ஆய்வு செய்ய அறிவுறுத்தினர்.

செல்லுலோஸ் கேப்ஸ்யூல்கள் பயன்பாடு குறித்த மாற்றம் மருத்துவ உலகில் கடுமையான விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் மாத்திரைகளின் விலை பல மடங்கு அதிகரித்துவிடும் என்பதும் ஒரு காரணம். இந்தக் குழு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், சந்தையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு ஒரு அறிக்கையை ஜூன் 2-ம் தேதி வெளியிட்டனர். அதில், 'இவ்விஷயத்தில் எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை, மறு பரிசீலினைக்கு உட்பட்டுத்தான் இருக்கிறது’ என்று கூறினார் இந்திய மருந்து கட்டுப்பாடு அதிகாரி டாக்டர் ஜி.என்.சிங்

இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் இவ்விஷயத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஒரு பக்கம் மத்திய அரசு மருந்து மாத்திரைகளின் விலையை குறைக்கச் சொல்லுகின்றனர். ஆனால் செல்லுலோஸ் மருந்துகளைத் தயாரிப்பதற்கு ஜெலட்டின் தயாரிப்புக்களைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு செலவு அதிகமாகும் என்றார் இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ராஜரத்தினம். அவர் மேலும் கூறுகையில் செல்லுலோஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று அறிக்கையில் குறிப்பிட்டது தவறானது. ஜெலட்டின் கேப்ஷுல்களில் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்பதும் தவறான தகவல். இது மக்கள் மனத்தில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கும். தவிர மாத்திரைகள் ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஒவ்வொரு விளைவை ஏற்படுத்தும். இந்த ஜெலட்டின் தயாரிப்புக்கள்தான் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றது என்பது தவறான வாதம்’ என்று கூறினார்.

ஜெலட்டின் என்றால் என்ன?

கேப்ஸ்யூல் மாத்திரைகளின் மேலுறையானது ஜெலட்டின் என்ற புரதப் பொருளால் செய்யப்பட்ட சவ்வு ஆகும். இந்தப் புரதம் பசு மாடு அல்லது எருதுக்களிலிருந்து பெறப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை அனேக ஜெலட்டின் தயாரிக்கும் நிறுவனத்தினர் மாட்டின் எலும்புகளைக் கொண்டுதான் ஜெலட்டின் தயாரிக்கின்றனர். எருமையின் எலும்பிலிருந்து கிடைக்கும் உறுதியான படிமங்களிலிருந்து அப்புரதத்தை எடுத்துக்கொள்கிறார்கள். மருந்துகளில் ஏராளமான அளவில் மாட்டிறைச்சியிலிருந்து பெறப்படக்கூடிய பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிறது மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.

இது குறித்து விவாதங்களும் சர்ச்சைகளும் கடுமையாக எழுந்துள்ள நிலையில் ஜெலட்டின் விவகாரம் மருந்து உற்பத்தித் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com