குழந்தைகளிடம் செல்போன் கொடுத்தால் என்ன ஆகும்?

அன்பான பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கித் தருவது
குழந்தைகளிடம் செல்போன் கொடுத்தால் என்ன ஆகும்?

அன்பான பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே செல்போன் வாங்கித் தருவது தேவையில்லாத பிரச்னைகளையும் ஆபத்துக்களையும் அவர்களுக்கு ஏற்படுத்திவிடக் கூடும் என்கிறது சமீபத்திய ஆய்வு.

சொந்தமாக செல்போன் வைத்திருக்கும் மூன்று முதல் ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது, அவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் சைபர் கொடுமைக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் காலகட்டம் 2014 - லிருந்து 2016 -ம் ஆண்டுக்குள்.  நிபுணர்கள் 3, 4 மற்றும் 5-ம் வகுப்புகளிலிருந்து 4,584 மாணவர்களைச் சந்தித்துப் பேசி ஆய்வுக்கான தரவுகளைச் சேகரித்தனர். இந்த ஆய்வின்படி, 9.5 சதவிகித குழந்தைகள் இணைய வழி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி மனரீதியாக பாதிப்படைந்திருந்தனர். இந்த செல்போன் உரிமையாளர்களில் மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களே அதிகமாக சைபர் புல்லியிங் எனப்படும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருந்தனர்.

இந்த மூன்று வகுப்பு மாணவர்களைத் தவிர செல்போன் வைத்திருக்கும் மற்ற வகுப்பு மாணவர்களும் கூட தாங்களும் இந்த சைபர் புல்லியிங்கில் (Cyber Bullying) மாட்டியிருக்கிறோம் என்று தாமாகவே ஒப்புக்கொண்டனர்.  

பெற்றோர் தங்கள் குழந்தைக்கு செல்போன் வாங்கித் தருவதற்கான காரணங்களை அடுக்குகின்றனர். ஆனால் இந்த இளம் வயதில் அதனை அவர்கள் வைத்திருப்பதால் ஏற்படும் எதிர்பாராத அபாயங்களைப் பற்றி அவர்கள் நினைப்பதில்லை என்றார் பிரிட்ஜ்வாட்டர் மாநில பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் எலிசபெத் கே. இங்கிலாந்தர்.

சமூக ஊடகங்களில் சின்னஞ்சிறிய வயதிலேயே பங்கு பெறுவதும், தொடர்ந்து இணையத் தொடர்பில் இருப்பதும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதும் பல சமயங்களில் ஆபத்தை வரவழைத்து விடும். கையில் ஃபோன் எப்போதும் இருப்பதால் இணைய வழிக் குற்றவாளிகளின் இலக்காக இவர்கள் உள்ளார்கள். மேலும் நல்லவர்கள் யார் தங்களுக்கு கெடுதல் விளைவிப்பவர்கள் யார் என்று பகுத்தறிய முடியாத வயது என்பதால் இவ்வயதினரை எளிதாக அணுக முடிகிறது. 

அறியாத வயதில் செல்போன் வைத்திருப்பது எதிர்மறையான விளைவுகளை அக்குழந்தைகளுக்கு ஏற்படுத்திவிடும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஆன்லைன் தொடர்புகளின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளும் வயதும் அவர்களுக்கு இல்லாதபட்சத்தில் தங்களுக்கு நேரக் கூடும் ஆபத்துக்களைப் பற்றி அறிந்து கொள்வதில்லை. சோஷியல் மீடியாவில் பங்கு கொண்டு மற்றவர்களின் இடுகைகளுக்கும் செய்திகளுக்கும் பதில் அளிக்கவே விருப்பம் கொள்கிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே செல்போன் கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய உதவி செய்யவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. செல்போன் குழந்தைகளிடம் இருப்பது மிகச் சில நன்மைகளை தந்தாலும், அதனால் ஏற்படும் அபாயங்களை யோசித்து அதன் அடிப்படையில் எலிமெண்டரி பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு எதற்கு செல்போன் வழங்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஒரு செல்போனை பெற்றோர் வாங்கித் தரும்போது, குறைந்தபட்சம், தங்கள் குழந்தைகளுடன் அது குறித்த சாதக பாதகங்களைப் பற்றி தெளிவாகப் பேசிப் புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கு அதைக் கையாளும் பொறுப்புகளை பொறுமையாகக் கற்றுத் தர வேண்டும். மேலும் சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்வதை தவிர்க்கச் சொல்ல வேண்டும் அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகையில் அதற்கான பொதுவிதிகளை அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்’ என்றார் இங்க்லாந்தர்.

இந்த ஆய்வு சிகாகோவில் அமெரிக்க மருத்துவ அகாடமி தேசிய மாநாடு மற்றும் கண்காட்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com