கோடை விடுமுறையிலாவது உங்கள் குழந்தைகளை கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள்!

கோடை விடுமுறை வந்தாலே பெற்றோர்களுக்குப் பெரும் பிரச்னைதான். அதுவும் அப்பா அம்மா வேலைக்கு செல்பவர்களாக இருந்தால்
கோடை விடுமுறையிலாவது உங்கள் குழந்தைகளை கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள்!

கோடை விடுமுறை வந்தாலே பெற்றோர்களுக்குப் பெரும் பிரச்னைதான். அதுவும் அப்பா அம்மா வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அடுத்த ஆண்டு படிப்பிற்கான டியூஷன், ஓவியம் வரைதல், சாஸ்திரீய சங்கீதம், இசைக் கருவிகள் இயக்கம், பலவகை நடனங்கள், நீந்துதல், யோகா, ஜிம்னாஸ்டிக் போன்ற பயிற்சிக்காக நகரங்கள் முழுவதும் ‘சம்மர் கேம்ப்' அதாவது கோடை முகாம்கள் தொடங்கிவிடுகின்றன.

பயிற்சி கட்டணம் மூவாயிரத்திலிருந்து பத்தாயிரம் அதற்கும் மேலாக வாங்கப்படுகின்றன. கோடை விடுமுறையில் பிள்ளைகளை எப்படிப் பார்த்துக் கொள்வது, யாரிடம் அல்லது எங்கே விட்டுச் செல்வது என்ற தேடல்களுக்குக் கோடை முகாம்கள் கரம் நீட்டுவதாகப் பெற்றோர் கருதுகின்றனர். தவிர... ‘தனியார் பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் பிள்ளைகளை சேர்த்தால்தான் ஆச்சு' என்ற மனநிலையில் இருக்கும் பெரும்பாலான பெற்றோர் ‘கோடை முகாமிலும் சேர்த்தால்தான் பிள்ளைகள் பன்முகத் திறமைகளுடன் வளருவார்கள்' என்ற நம்பிக்கையில் பிள்ளைகளை கோடை முகாம்களில் சேர்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற கோடை முகாம்களால் பிள்ளைகளுக்கு நன்மையும் உண்டு. அதே சமயம், கோடை முகாம்களால் பிள்ளைப் பருவத்தினரின் விடுமுறை களவாடப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. ஆனால், ‘கோடை முகாம்களால் நன்மையோ நன்மை' என்று அடித்துச் சொல்பவர் முனைவர் பட்டம் வாங்க தயாராகிக் கொண்டிருக்கும் புதுவையை சேர்ந்த. இரா. தேவி. ‘கல்வி... வீட்டுப் பாடம் என்று ஆண்டில் பத்து மாதம் செக்கு மாடுகள் மாதிரி சுற்றி வந்த களைப்பை விலக்கி, தனக்குப் பிடித்ததைத் தெரிந்து கொள்ளும், பழகிக் கொள்ளும் மகிழ்ச்சியான உலகினுள் வாழத் தொடங்குகிறார்கள்.

'தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு புத்தகக் கல்வி மட்டும் போதாது. ஒவ்வொரு குழந்தையும் பலவித திறமைகள் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அத்தியாவசியமான ஒன்று. விடுமுறை நாட்களை வீணாக்காமல் குழந்தைகள் ஏதாவது ஒரு கலைத்திறனை கற்றுக்கொள்வது நல்லது. இது குழந்தைகளின் தனித்திறனை வெளிப்படுத்த கூடியதாக இருக்கும். தவிர நாளைய போட்டி உலகில் தனக்கென்று ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள ஒரு அஸ்திவாரமாகவும் அமையும். முகாமில், குழந்தைகளுக்கிடையே பரிச்சயம், கருத்துப் பரிமாற்றம் நிகழும் இடமாக பயிற்சி வகுப்புகள் உள்ளன. இதனால், பள்ளியில் உள்ள நட்பு வட்டத்துடன் புதிதாக ஒரு நட்பு வட்டம் பூக்கும். யாரிடம் எப்படிப் பழக வேண்டும், பேசிட வேண்டும் என்றும் குழந்தைகளை கோடை முகாம்கள் பழக்குகின்றன.

குழந்தையின் கலைத்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஓவியம், இசை, நாடகம் மட்டுமல்லாமல், அறிவு சார்ந்த திறனை மேம்படுத்த அபாக்கஸ், ஆடுபுலி ஆட்டம், கதை சொல்லி நடித்தல் போன்றவை உள்ளன. கோடைகால வகுப்பினால் குழந்தையின் சந்தோஷமானது தடை செய்யப்படுகிறது என்ற நினைப்பு தவறானது. அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தை மட்டுமே வகுப்பிற்கு செலவாக்கப்படுகிறது. வீட்டில் டி.வி. பார்த்து அலைபேசியைத் தடவி வீணாக பொழுதை கழிப்பதைவிட, கோடை முகாமில் செலவழிக்கும் இரண்டு மணி நேரத்தில் பிள்ளைகளுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள், சவால்களை எதிர்கொள்ளும் மன தைரியத்தை உருவாக்கும். பொது அறிவும் விசாலமாகும். வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தையின் திறனை வளர்த்துக் கொள்ளச் செய்வதோடு குழந்தையின் பாதுகாப்பு வேண்டியும் வகுப்பில் சேர்க்கின்றனர். குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப யோகா, நீச்சல், நடனம் என பலவற்றில் ஈடுபடுத்தலாம். இதனால் உடல் ஆரோக்கியமும் உறுதி செய்யப்படுகிறது.

கோடைகால பயிற்சி வகுப்புகள் வியாபார நோக்கத்தோடு பணம் சேகரிக்க விரும்புகின்ற நிலை பரவலாக இருப்பினும் சில தரமிக்க பாதுகாப்பான பயற்சி வகுப்பு மையங்கள் உள்ளன. பெற்றோர் தன் பிள்ளைகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பயிற்சி வகுப்புகளை ஆராய்ந்து சேர்க்க வேண்டும். கோடை முகாம்களில் சொல்லித்தரப்படும் போட்டிகள், விளையாட்டுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள், தோல்வியை ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைத் தருகின்றன. வாழ்வில் வரும் சோதனைகளை ஆக்கபூர்வமாக அணுகும் முறையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்' என்கிறார் தேவி.

புதுவையைச் சேர்ந்த நூலாசிரியர் முனைவர் பிரபாவின் கருத்துகள் இதோ: ‘ஆண்டில் பத்து மாத காலம் இயந்திரமாக இயங்கிய பிள்ளைகள், கோடை விடுமுறையின் போதுதான் ‘அப்பாடா' என்று பெரு மூச்சுவிடுகிறார்கள். அவர்களை மீண்டும் ‘இன்னொரு பள்ளி'க்கு தள்ளி விடுவது நியாயம் அல்ல. பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பாகக் குழந்தைகளின் விளையாட்டு, அவர்களின் விருப்பம் சார்ந்தே அமைந்திருந்தன.

இன்றைய காலகட்டத்தில் ‘இந்தப் படிப்பை பிள்ளைகள் படிக்க வேண்டும்; என்றும் பெற்றோர் தீர்மானிப்பது போல் ‘பிள்ளைகள் எந்த விளையாட்டில் பயிற்சி பெற வேண்டும்' என்று பெற்றோர்களே தீர்மானிக்கிறார்கள். ஆக பிள்ளைகளின் கல்வி, விளையாட்டு பொழுதுபோக்கு பெற்றோர்களின் விருப்பம் சார்ந்தவையாக மாறியுள்ளன. தொலைபேசியிலும், கணினியிலும் குழந்தைகள் மூழ்கிக் கிடக்கின்றனர். உற்றார் உறவினரின் குழந்தைகளுடன் கூடி விளையாடும் குழந்தைகளின் கூட்டம் இன்று சிதறி.... கூட்டம் கூட்டமாகக் கோடை முகாமில் குழுமிக்கிடக்கின்றனர்.

குழந்தைகளின் தகுதி திறமைகளைக் கண்டறிந்து அவற்றை ஊக்குவிக்கக் கோடை முகாம்கள் இயங்குவதாகப் பெற்றோர் கருதுகின்றனர். ஓர் ஆண்டு முழுவதும் படிப்பும், பயிற்சியுமாகப் பழக்குவித்த குழந்தைகளைச் சற்றுச் சுதந்திரமாக விட்டுத்தான் பாருங்களேன். குழந்தைகளின் மனது மென்மையான பட்டாம்பூச்சியைப் போன்றது. சுதந்திரமாகப் பறந்திடத்தான் தோன்றுமே தவிர, ஓரிடத்தில் அடைப்பட்டுச் சிக்கித் தவிப்பதை ஒருபோதும் விரும்புவதில்லை. தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என உற்றார் உறவினரோடு மட்டுமல்லாது, அக்கம் பக்கத்து வீட்டாரோடும் கூடிப்பழகும் வாய்ப்பும் இன்றைய குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையைத் தொலைத்தோம். கோழிக்கூட்டுவாசிகள் ஆனோம். தனிக் குடும்ப வாழ்க்கையில் இன்பம் உண்டென நினைத்து, அன்பையும், ஆதரவையும் இழந்து தவிக்கின்றோம். உறவுகளின் மேன்மையை நாமே உணர மறுக்கின்றோம். பின்பு குழந்தைகளிடம் எப்படி உறவுகளின் ஒற்றுமை, மேன்மையைப் பற்றிச் சொல்லி வளர்ப்பது? இன்று சிறுவயதில் பாசம் காட்டி வளரும் சகோதரர்கள், சகோதரிகள் நாளை ஒன்றாக இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? நாமும் குழந்தைப் பருவத்தில் சகோதரர்கள் சகோதரிகள் ஒன்றாகத்தான் ஓடி விளையாடினோம் . இப்போது ..?

பெற்றோர்களே கோடை விடுமுறையில் உங்களது பிள்ளைகளுடன் செலவிட விரும்புங்கள். குறைந்தது இரு வேளை உணவை அவர்களுடன் சேர்ந்திருந்து அருந்துங்கள். பிள்ளைகளை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி பழக்குங்கள். செடிகளை நடும் முக்கியத்துவத்தைச் சொல்லி நடச் செய்யுங்கள். வீட்டு விலங்குகளான, நாய், பூனை, அன்பு காட்டச் சொல்லுங்கள். சமையலின் போது மகன் மகள் வித்தியாசம் பார்க்காமல், காய்கறி நறுக்கித் தரச் சொல்லுங்கள். சமையல் செய்முறையை பிள்ளைகள் கேட்க சொல்லிக் கொண்டே சமையல் செய்யலாம்.

பிள்ளைகள் சாப்பிட்ட தட்டுகளை அவர்களைக் கொண்டு கழுவச் செய்யுங்கள். மாலை வேளைகளில் மைதானத்தில் ஓடி விளையாடட்டும். கீழே விழுந்து சிராய்ப்புகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை. விழுந்தால்தான் எழுந்திருக்க முடியும். தாத்தா, பாட்டி, உறவினர்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். எத்தனை நாள்தான் பெற்றோர் சொன்ன கதைகள் கேட்பார்கள். தாத்தா பாட்டியும் கதைகள் சொல்லட்டுமே... உறவுகளின் மேன்மையை அவர்களது உள்ளத்தில் ஊட்டி வளர்க்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

நமது குழந்தைகளின் சிந்தனை ஆற்றலையும், விளையாடும் பழக்கத்தையும் கோடை முகாம் என்ற பெயரில் நாமே முடக்கி விடுகின்றோம். வீட்டை விட சிறந்த கோடை முகாம் வேறொன்றும் இல்லை'' என்கிறார் பிரபா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com