இதயத் துடிப்பு சரியாக இருக்க என்ன செய்யவேண்டும்?

நாம் உடற்பயிற்சிக்காக் செய்யும் செயல்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இதயத் துடிப்பு சரியாக இருக்க என்ன செய்யவேண்டும்?

நாம் உடற்பயிற்சிக்காக் செய்யும் செயல்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நடைப்பயிற்சி, அல்லது ஜிம் பயிற்சிகள், நீச்சல் அல்லது ஸ்கிப்பிங் என ஏதாவது ஒரு பயிற்சியின் போதான நம்முடைய  ஒவ்வொரு  செயல்பாடுகளையும் அளவிட்டு சொல்வதற்கு பல நவீன கருவிகள் பெருகிவிட்டன. அதில் ஒன்றுதான் இந்த ஃபிட்னெஸ் பேண்டுகள் (Fitness Bands).

ஃபிட்னெஸ் பேண்டின் வேலை என்னவெனில் நம்முடைய உடல் எடை அதிகரிக்கும் போதும் உடல் எடை குறையும் போது அதைக் கண்காணித்து தகவல் சொல்லிவிடும். தவிர நம் உடலில் கலோரிகளை கணக்கிடவும், தினசரி நாம் செலவிடுகின்ற சக்தியை அளவிட்டும் சொல்கிறது இந்தக் கருவி. இதனை எப்போதும் நம் உடலில் எதாவது ஒரு பகுதியில் கட்டி வைத்திருக்க வேண்டும். எளிதாக கையில் கைக்கடிகாரமாக அணிந்து கொள்ளலாம். இந்தக் கருவியை ப்ளூடூத் மூலமாக நம்முடைய ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொள்ள முடியும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஃபிட்னெஸ் பேண்டுகள் சமீபத்தில் பரவலாகிக் கொண்டு வருகிறது. தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களும், உடல் எடை குறைக்க பயிற்சி செய்பவர்களும் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவை வாட்ச் வடிவில் ஸ்டைலாகவும் எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாக்கிங் செய்யும் போது, ஓடும் போது, அல்லது சைக்கிளிங் என எந்த செய்கையின் போதும் நம்முடைய வேகத்தையும் தூரத்தையும் இந்த வாட்ச் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கணித்துவிடும். இந்தக் கணிப்பின் மூலம் நம்முடைய பயிற்சியின் போக்கினை தெரிந்து மாற்றம் செய்து பயிற்சியைத் தொடரலாம். அல்லது அந்தக் கருவி கூறும் ஆலோசனைகளை கேட்டு அதற்கேற்றபடி பயிற்சி செய்யும் வகையில் அது உள்ளது.

இன்னும் சில புது டிசைன் பேண்டுகளில் இதயத்துடிப்பு பற்றிய விபரங்களை விரல் நுனியில் அறிந்து கொள்ளலாம். நம்முடைய உடலில் கலோரி எரிகின்ற அளவை தெரிவிக்கும் இந்த வாட்ச்சை தொட்டால் போதும், உடனே நம்முடைய இதயத்துடிப்பை அது தெரிவிக்கும்.

இவை தொழில்நுட்பத்தில் உச்சபட்ச சாத்தியங்கள் எனலாம். ஆனால் ஒரு கருவியைக் கொண்டு நம்முடைய செயல்பாடுகளை கட்டமைத்துக் கொள்வது முற்றிலும் சரியா? எப்போதும் எந்த நிலையிலும் இத்தகைய இயந்திரக் கருவிகள் சரியாக இயங்குமா? இயந்திரம் என்பது நமக்கு அத்தனை முக்கியமாகப் போய்விட்டதா என்றெல்லாம் யோசித்தால் நிச்சயம் இவற்றுக்கு மாற்று உண்டு. அது நம்மிடம் தான் உள்ளது.

இந்தக் கருவிகள் யாவும் ஆரோக்கியமான ஒருவரின் செயல்திறனை கணக்கில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளவை. இதை இதயக் கோளாறு உள்ளவர்களோ, வயோதிகர்களோ தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்திவிட்டால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

உதாரணமாக நல்ல ஆரோக்கியம் உடையவர்கள் உடற்பயிற்சி செய்யும் போது இந்த கருவி அவர்களின் கைகளில் கட்டப்பட்டிருக்கையில் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கணக்கிட்டு அது உடனடியாக ஒரு ரிசல்ட்டை தருகிறது. தவறாக செய்யும் போது உடனே எச்சரிக்கை அதிலிருந்து வரும். இதன் மூலம்  அவர்கள் செய்கின்ற உடற்பயிற்சியை திருத்திக் கொள்ள முடியும். ஆனால் உடல் நலம் குறைந்தவர்கள் அந்த வாட்ச் அணிந்து பயிற்சி செய்யும் போது அந்தக் கணக்கு அவர்களை சோர்வடையச் செய்துவிடும். இது போலக் கருவிகள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமானது. ஒவ்வொருவரின் செயல்திறனும் தனித்துவமானது. விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும் ஸ்டாமினா சாதாரணமானவர்களுக்கு இருக்காது. அதே போல் உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்களுக்கு இருக்கும் சக்தி, அலுவலக இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இருக்காது. எனவே இத்தகைய கருவிகளை பொதுப்படையாக அனைவருக்கும் உரிய ஒன்றாக வடிவமைத்திருப்பது முறையல்ல.

நடைபயிற்சியை அளவிடும் கருவியொன்று, ஒருவர் சராசரியாக தினமும் 1000 அடிகள் நடக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை இளைஞர்கள் எளிதில் எட்டிவிட முடியும். ஆனால் வயதானவர்களால் எளிதில் அந்த இலக்கை அடைய முடியும் என்று சொல்லிவிட முடியாது. இளைஞர்களுள் சிலராலும் கூட அந்தளவுக்கு நடக்க முடியாது போவதும் உண்மை. எனவே அவர்கள் என்ன செய்வார்கள்? என்று கேட்கிறார் தில்லியைச் சேர்ந்த கார்டியாலஜிஸ்ட் டாக்டர் அஸ்வானி மேத்தா

ஒரு மனிதன் எத்தனை அடிகள் நடக்க முடியும் என்பது அவரது BMI பொருத்துதான் அமையும். தன்னுடைய உடல் திறனையும் மீறி ஒருவர் இந்தக் கருவியின் கணக்குப்படி நடக்க ஆரம்பித்தால் மிகவும் சோர்வடைந்து விடுவார்கள். இப்படியே தொடர்ந்தால் அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என்றார் டாக்டர் மேத்தா.

ஃபிட்பிட்ஸ் எனும் ஃபிட்னெஸ் பேண்டுகள் இதயத் துடிப்பை கணக்கெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை துல்லியமான கணக்காக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதுவும் சில உடற்பயிற்சிகளுக்குப் பிறகு உடல் சம்பந்தப்பட்ட சில தகவல்களை தெரிந்து கொள்வது தேவையற்றது என்கிறார்கள் மருத்துவர்கள். நம்முடைய ஹார்ட் பீட் இவ்வளவா என்று பார்த்தே அதிர்ச்சி அடையும் நபர்களும் இருக்கிறார்கள். எனவே இது போன்ற கருவிகளின் சுமாரான கணிப்புக்களை நம்பிவிட வேண்டாம் என்கிறார் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஸ்டடியை சேர்ந்த டாக்டர் மார்க் கில்லிநோவ்

ஆய்வொன்றில் ஃபிட்னெஸ் பேண்ட் அணிந்த ஒருவரை உடற்பயிற்சியை மேற்கொள்ளச் செய்து நான்கு முறை எலெக்ட்ரோ கார்டியோகிராம் பரிசோதனை செய்தார்கள்.

அவரது உடற்பயிற்சியைப் பொருத்து ஃபிட்னெஸ் பேண்ட் ஒரு நிமிடத்துக்கு 34 தடவை இதயத்துடிப்பு இருந்தது. இந்த ஃபிட்னெஸ் பேண்ட் போன்ற கருவிகள் இதயத் துடிப்பை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கணிக்கிடுகின்றன என்றார் இதய குழாய் ஆராய்ச்சியாளர் மற்றும் இதயம் சம்பந்தம்ப்பட்ட ஆராய்ச்சிகளில் விற்பன்னரான டாக்டர் கில்லிநோவ்.

இந்த ஃபிட்னெஸ் பேண்ட் வாட்சுகளின் கணிப்பு ட்ரெட்மில் போன்ற ஜிம் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது சிலசமயம் சரியாகவே இருந்தாலும், சைக்ளிங் போன்ற பயிற்சிகளின் போது அந்தளவு துல்லியமாக இருப்பதில்லை என்கிறது இந்த ஆய்வின் முடிவு.

இந்த ஆராய்ச்சிகளும் அதன் முடிவுகளும் ஒருபுறம் இருக்கட்டும், நம் ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும் சீராக இருக்க, நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான். அது நம்பிக்கை, நம் மீதான நமக்கு இருக்க வேண்டிய அசைக்க முடியாத நம்பிக்கை. கருவிகள் ஒருபோதும் நம்மை கட்டுப்படுத்த அனுமதிக்கக் கூடாது. அதன் மீதான கவனத்தை நாம் உடனடியாக நிறுத்திவிட்டு உடல் பயிற்சியை இயல்பாக செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com