உடல் உறுப்பு தானம் அளிப்போரின் எண்ணிக்கையை 2017 இறுதிக்குள் 20 லட்சமாக உயர்த்த இலக்கு: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தகவல்

உடல் உறுப்பு தானம் அளிப்போரின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு (2017) இறுதிக்குள் 20 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை வழங்கலில் முதன்மை மாநிலத்துக்கான விருதை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் வழங்கும் மத்திய
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை வழங்கலில் முதன்மை மாநிலத்துக்கான விருதை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் வழங்கும் மத்திய

உடல் உறுப்பு தானம் அளிப்போரின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு (2017) இறுதிக்குள் 20 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பாக, 7-ஆவது இந்திய உடல் உறுப்பு தானம் தினம் தில்லியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேசியதாவது:
இந்திய மக்களில் பெரும்பான்மையானோர் உறுப்புகளை தானமாக அளிக்கத் தயாராக உள்ளனர். அதற்கேற்ப மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மாற்று அறுவை சிகிச்சை தேவைக்கும், உறுப்பு தானத்துக்கும் இடையே பெரிய அளவில் இடைவெளி உள்ளது.
உதாரணமாக, இரண்டு லட்சம் சீறுநீரகங்கள் தேவை எழும் வேளையில், ஆறாயிரம் முதல் ஏழாயிரம் வரையிலான சீறுநீரகங்களைத்தான் நடைமுறையில் நம்மால் தானம் அளிக்க முடிகிறது. இதேபோல 30 ஆயிரம் கல்லீரல்களின் தேவை எழுந்தால், 1,500 கல்லீரல் மட்டுமே தானமாக அளிக்க முடிகிறது. இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு இதய மாற்று சிகிச்சை செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆனால் 100 பேருக்கு மட்டுமே மாற்று இதயம் பொருத்த முடிகிறது.
உடல் உறுப்பு தானம் தொடர்பாக பொதுமக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் (என்ஜிஓ), ஆலோசகர்களும் பெரிய பங்களிப்பை வழங்க முடியும்.
உடல் உறுப்பு தானம் குறித்து பிரதமர் தனது "மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிறகு உடல் உறுப்பு தானம் வழங்கல், மிகப் பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. கடந்த மார்ச் வரை 10 ஆயிரம் பேர் உடல் உறுப்பு தானம் வழங்கப் பதிவு செய்திருந்தனர். தற்போதைய நிலையில், இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இதை 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் 20 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஜே.பி.நட்டா.

தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 7-ஆவது இந்திய உடல் உறுப்பு தானம் தினம் நிகழ்ச்சியில், "உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை' வழங்கலில் முதன்மை மாநிலத்துக்கான விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை, நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மக்கள் நல்வாழ்த் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வழங்கினார்.
நிகழ்ச்சியில் விஜயபாஸ்கர் பேசுகையில், "தமிழக முதல்வரால் தமிழக அரசு இரண்டாவது முறையாகத் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 895 கொடையாளர்களிடமிருந்து 4,992 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாகச் செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com